Tuesday, December 28, 2010

Dinamani (14-10-2010): கட்டுரைகள் - பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! - அ.நாராயணன்

பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! 
 

By அ. நாராயணன் 
14 Oct 2010 

சென்னை மாநகராட்சி முழுவதும் 20 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரம் சென்னை மேயர் அறிவித்திருப்பது வரவேற்புக்கு உரியது. ஆயினும், திடீரென்று வந்துள்ள இந்த அறிவிப்பை, ""மிகத் தாமதமாக வந்துள்ள மிகக் குறைந்தபட்ச நடவடிக்கை'' என்றும் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.
 1999-ம் ஆண்டே, சென்னை மாநகராட்சி 20 மைக்ரான் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றி, அதனடிப்படையில் தமிழக அரசிடம் உள்ளாட்சி சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கக்கேட்டு விண்ணப்பித்தது. பின்னர், திடக்கழிவு மேலாண்மை மூலமே மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்து விடுவோம் என்று நேற்றுவரை கூறி வந்துள்ளது மாநகராட்சி. இவ்வாறு பதினோரு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இப்பொழுதுதான் இப்பிரச்னையின் தீவிரத்தைச் சிறிதாவது உணரத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
 ஆனால், 20 மைக்ரான் தடிமன் எனும் அளவுகோல் ஒன்றுக்கும் உதவாது என்பதை நாம் உணர வேண்டும். மிக எளிதாக 21 மைக்ரான் அல்லது 24 மைக்ரான் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் வியாபாரிகள் வண்ணமயமான, ஆனால் மிக ஆபத்தான மெல்லிய பைகளைத் தாராளமாகப் புழக்கத்தில்விட முடியும். மேலும், மிக மலிவான விலை என்பதால் 40 அல்லது 50 மைக்ரான்வரை கூட பிளாஸ்டிக் பைகளைப் பிரித்து காசாக்க முயல்வது, இன்றைக்கு சிறிதும் லாபமற்ற தொழில் என்றே கருதப்படுகிறது. அதனால்தான், யாரும் மிக மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களை ஆர்வமுடன் பிரித்துச் சேகரிக்க முன்வருவதில்லை.
 இக்காரணத்தின் அடிப்படையிலேயே, மேற்கு வங்கம், மும்பை, தில்லி, சண்டீகர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் 40 மற்றும் 50 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருள்களும் தடை செய்யப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
 தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 இக்கட்டுரை ஆசிரியர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.
 சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :-
 உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சுழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன.
 தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும்.
 முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன.
 ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும். மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
 சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
 - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009.
 சென்னை உள்பட, தமிழகத்தில் பல நகராட்சிகளில் வெள்ள நீர் கால்வாய்கள் அடைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும், கழிவுநீர் பாதாளச் சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கும், கொசுக்கள் பெருகி மர்மக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற பலநோய்கள் ஏற்படுவதற்கும், விசிறியடிக்கப்படும் பைகள், கப்புகள், ஸ்பன்கள் போன்றவைதான் முதன்மைக் காரணம்.
 அதுபோல, பெரிய ஹோட்டல்கள் முதல் தெருமுனை கையேந்தி பவன்கள் வரை உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேக்கேஜிங்குகளில் அல்லது பைகளில் பார்சல் செய்து தருகிறார்கள். உணவுப் பொருள்களின் சூடு மற்றும் எண்ணெய்ப்பதத்தால், பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான பல வேதிப் பொருள்கள், ரசாயன சாயங்கள் மற்றும் காரீயம், ஆர்சனிக், நிக்கல், மெர்க்குரி போன்ற உலோகங்கள் உணவுடன் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இவ்வாறு உண்பது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது. அதேபோல, மீந்துவிடும் உணவுடன் பிளாஸ்டிக் பைகளையும் கால்நடைகள் சேர்த்து விழுங்கிவிடுகின்றன.
 அதனால், நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமங்களிலும்கூட மேய்ச்சலுக்குப் போகும் கால்நடைகள் மற்றும் கன்றுக்குட்டிகள், நூற்றுக்கணக்கில் தமிழகத்தில் இறந்து வருவது நடைமுறையாகிவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் கால்நடைகளின் குடலில் தங்கிவிடுவதால், அவை கறக்கும் பாலில் உண்டாகும் நச்சுத்தன்மையை ஆராய தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் முற்பட்டு வருகிறது.
 இவ்வளவு ஆபத்துகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவை தடை செய்யப்பட்டால், கணிசமான வேலை இழப்புகள் ஏற்படும் எனும் வாதம் மிகத் தவறானது. மாறாக, தையல் இலை, வாழை இலை, தாமரை இலை மற்றும் மட்டை, பாக்கு மட்டை, துணிப்பை, காகிதப்பை, சணல்பை என்று பல விதங்களில் இயற்கைக்கு உகந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அதிக அளவில் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும். அதோடு, தமிழக விவசாயிகளுக்கும், இவ்வகை மூலப்பொருள்களை விளைவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
 150 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட வங்கதேசத்தில், இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டால், பொதுமக்களும் சரி, உணவு விடுதிகளும் சரி அவசியமான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.
 இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
 இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் கடமையாகும். சென்னையின் மேயரும் சரி, தமிழக அரசும் சரி தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுப்பார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment