Tuesday, December 28, 2010

Dinamani (25-05-2009): கட்டுரைகள் - அழுவதா? சிரிப்பதா? - அ.நாராயணன்

அழுவதா? சிரிப்பதா? 
அ. நாராயணன் 
Published : 25 May 2009


 
 
சென்னையிலுள்ள குப்பங்களில் ஒடுங்கிக் கிடக்கும் அடித்தட்டு மக்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. இதற்காக, இன்னொரு இலவசத் திட்டமாக, பச்சை, சிவப்பு பக்கெட்டுகளை ரூ. 50 லட்சம் செலவில் விநியோகம் செய்தது. இதைப்பற்றி, தமிழக முதல்வர்கூட, அவரது கேள்வி - பதில் வெளியீடு மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.  மேலும், மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, கூவத்தைத் தூய்மையாக்க சத்ய சாய்பாபாவிடமிருந்து நிதி பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.  அரசு கொண்டு வரும் ஒவ்வொரு புதிய திட்டத்தையும் உடனடியாகக் குறை கூறுவது அழகல்ல. எனினும், மாநகராட்சியின் இத்தகைய தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் திட்டங்களை நினைத்தால் அழுவதா? சிரிப்பதா? அல்லது அழுது கொண்டே சிரிப்பதா? என்றே புரியவில்லை.  இன்று வாழைப்பழமும், பப்பாளியும்கூட ஏழைகளுக்கு எட்டாக் கனிகளாகிவிட்டன. விலைவாசி உயர்வால் அவர்களது அடிப்படை வாழ்வாதாரமே மங்கி வரும் நிலையில், அவர்கள் எங்கே குடியிருப்புகளில், மக்கும், மக்காத குப்பைகளை உற்பத்தி செய்யப் போகிறார்கள்?  நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் வரைமுறையற்ற நுகர்வுக் கலாசாரமும், தமிழகத்தின் பல்வேறு இடங்கள் நகர்ப்புறங்களாகி வருகின்ற நிலையுமே, பெரிய அளவில் குப்பைகளின் பெருக்கத்துக்கு காரணங்களாகி வருகின்றன. இதற்கும் குப்பத்து அடித்தட்டு மக்களுக்கும் அதிக சம்பந்தம் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் எல்லா நடுத்தரக் குடும்பங்களும், குப்பைகளைக் கலந்து கட்டி, தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளின் மேல் அபிஷேகம் செய்து விடுகின்றனர்.  நூற்றுக்கணக்கான குப்பை சேகரிப்பவர்கள், சிறுவர்கள் குப்பைத்தொட்டிகளைச் சரித்துக் கொட்டி, விலைபோகும் பொருள்களைப் பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள். இவ்வகைத் தொழில்தான் குப்பை வளாகங்களிலும் இரவு பகலாக நடக்கிறது.  சூப்பர் மார்க்கெட்டுகள், திருமண மண்டபங்கள், கையேந்தி பவன்கள், டாஸ்மாக் பார்கள், கசாப்புக் கடைகள், இளநீர் கடைக்காரர்கள், விடுதிகள் என்று எல்லா வியாபாரிகளும் மழைநீர் வடிகால்வாய்களை குப்பைத் தொட்டிகளாக உபயோகிப்பதே நடைமுறை உண்மை.  மாநகராட்சிகளுக்கு உண்மையான அக்கறையிருந்தால், இவ்வகை வியாபாரிகளிடமும், நடுத்தர மேல்தட்டு மக்களிடமும் தான், குப்பை குறைப்பு மற்றும் குப்பை பிரிப்பு போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை "சட்டமாக' இயற்றி, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.  மேலும் ஒப்பந்தப் பணியாளர்களோ, நகராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களோ, கையுறை, காலணி இல்லாமல் தான் துப்புரவுப் பணி செய்கிறார்கள். மழைநீர் வடிகால்வாய்களில், தகுந்த பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் அளிக்காமல், சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு தூர்வாரக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை செய்து இரண்டு வருடங்களாகின்றன. ஆயினும் நீதிமன்ற ஆணையை சற்றும் மதிக்காமல் மழைக்குப் பின்னால்கூட, நூற்றுக்கணக்கான மாநகராட்சிப் பணியாளர்கள், எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே, நாற்றம் பிடித்த மழைநீர் வடிகால்வாய்களில் இறங்கி தூர்வார பணிக்கப்பட்டார்கள்.  ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் சட்டத்துக்குப் புறம்பாக அவர்களது கழிவு நீர்க் குழாய்களை, மழைநீர் வடிகால்வாய்களுடன் இணைத்திருப்பது, தமிழகம் முழுவதுமே நடந்து வரும் விஷயம். நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இந்நிலையை மாற்றுவதற்கு முனைப்பான செயல்பாடு நிர்வாகங்களிடம் இல்லை.  சென்னையைச் சுற்றி பல வீடுகளிலும், நிறுவனங்களிலும், ஆலைகளிலும் இருந்து லாரி, பம்புகள் மூலம் அப்புறப்படுத்தும் கழிவு நீரை, ஒப்பந்ததாரர்களில் சிலர், சோம்பேறித்தனத்தினாலோ, டீசல் மிச்சம் பிடிக்க வேண்டியோ, சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லாமல், கூவத்திலோ அல்லது அருகிலுள்ள ஓடைகளிலோ, சப்தம் போடாமல் விட்டு விடுகின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், அரைகுறையாக சுத்திகரிப்பு செய்த சாக்கடை நீரை மீண்டும் நீர்நிலைகளிலேயே விட்டுவிடுகின்றன.  கடந்த 20 ஆண்டுகளாக ஒருமுறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் மெல்லிய பாலித்தீன் பைகளின் உபயோகம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 2002-ம் ஆண்டு, 20 மைக்ரானுக்குக் குறைவான மெல்லிய பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவ்வகை பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டோரின் மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இன்று எல்லாக் கோயில்களிலும், அர்ச்சனைகள்கூட கடவுள்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் வைத்துச் செய்யப்படுகிற அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு மங்கி விட்டது.  ஒவ்வோர் ஆண்டும், சென்னையில் மழைக் காலங்களில் நீர் வடியாமல் எல்லோரும் அவதிக்குள்ளாவதற்கு, இவ்வகை பாலித்தீன் பைகள், பொருள்கள், மழை நீர் வடிகால்வாய்களை அடைத்துக் கொள்வதே காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லா நீர் நிலைகளிலும் இவ்வகை பாலித்தீன் பைகள் மிதந்து கொண்டும், அடைத்துக் கொண்டும் உள்ளன. எவ்வளவு கோடிகளை, மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு செலவழித்தாலும், இந்நிலை நீடித்தால், பருவம் தவறாமல், தாக்கும் மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இவையெல்லாம், கீழ்த்தட்டு மக்களையும், அவர்களது குழந்தைகளையுமே அதிக அளவில் பாதிக்கின்றன.  பஞ்சாப், கோவா, மேற்கு வங்கம், தில்லி, ஒரிசா போன்ற மாநிலங்களில் 40 மைக்ரான் தடிமனுக்குக் கீழ் உள்ள பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 50 மைக்ரானுக்குக் குறைவாகவும், இமாசலப் பிரதேசத்தில் 70 மைக்ரானுக்குக் குறைவாகவும் தடிமன் உள்ள பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில்கூட, அதிரடியாக 150 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் வங்கதேசம், வேலை இழப்பிற்குப் பதில், புதிதாக ஆயிரக்கணக்கான சணல், மூங்கில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நிரந்தர வாழ்வாதாரம் உருவாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  உலக அளவில் கட்டட வல்லுநர்களுக்கு போட்டி வைத்து, கோயம்பேடு காய்கனி வளாகம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது எங்கு திரும்பினாலும், அழுகிய குப்பை வளாகமாகவும், திறந்தவெளிக் கழிப்பிடமாகவுமே காட்சியளிக்கிறது. காய்கனிக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயார் செய்யும் திட்டம்கூட இன்றைய அளவில் செயலற்று உள்ளது.  தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள் ஆகிய பிரச்னைகளுக்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரியான நீண்ட காலத் தீர்வுகள் எட்டப்படவில்லை. கடலூர், மேட்டூர் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களால், நிலத்தடி நீரும், காற்றும் பாழ்பட்ட நிலை ஆகிய எதிலுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அரைகுறை நடவடிக்கைகளினால், எந்த மாற்றமும் நிகழவில்லை. இன்றுவரை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே காட்சியளிக்கிறது.  கூவத்தை இனி சுத்தம் செய்வதற்கு வேண்டுமானால் சாய்பாபாவிடமிருந்து நிதி வேண்டியிருக்கலாம். ஆனால் கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment