Tuesday, December 28, 2010

Dinamani (25-05-2009): கட்டுரைகள் - அழுவதா? சிரிப்பதா? - அ.நாராயணன்

அழுவதா? சிரிப்பதா? 
அ. நாராயணன் 
Published : 25 May 2009


 
 
சென்னையிலுள்ள குப்பங்களில் ஒடுங்கிக் கிடக்கும் அடித்தட்டு மக்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. இதற்காக, இன்னொரு இலவசத் திட்டமாக, பச்சை, சிவப்பு பக்கெட்டுகளை ரூ. 50 லட்சம் செலவில் விநியோகம் செய்தது. இதைப்பற்றி, தமிழக முதல்வர்கூட, அவரது கேள்வி - பதில் வெளியீடு மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.  மேலும், மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, கூவத்தைத் தூய்மையாக்க சத்ய சாய்பாபாவிடமிருந்து நிதி பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.  அரசு கொண்டு வரும் ஒவ்வொரு புதிய திட்டத்தையும் உடனடியாகக் குறை கூறுவது அழகல்ல. எனினும், மாநகராட்சியின் இத்தகைய தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் திட்டங்களை நினைத்தால் அழுவதா? சிரிப்பதா? அல்லது அழுது கொண்டே சிரிப்பதா? என்றே புரியவில்லை.  இன்று வாழைப்பழமும், பப்பாளியும்கூட ஏழைகளுக்கு எட்டாக் கனிகளாகிவிட்டன. விலைவாசி உயர்வால் அவர்களது அடிப்படை வாழ்வாதாரமே மங்கி வரும் நிலையில், அவர்கள் எங்கே குடியிருப்புகளில், மக்கும், மக்காத குப்பைகளை உற்பத்தி செய்யப் போகிறார்கள்?  நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் வரைமுறையற்ற நுகர்வுக் கலாசாரமும், தமிழகத்தின் பல்வேறு இடங்கள் நகர்ப்புறங்களாகி வருகின்ற நிலையுமே, பெரிய அளவில் குப்பைகளின் பெருக்கத்துக்கு காரணங்களாகி வருகின்றன. இதற்கும் குப்பத்து அடித்தட்டு மக்களுக்கும் அதிக சம்பந்தம் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் எல்லா நடுத்தரக் குடும்பங்களும், குப்பைகளைக் கலந்து கட்டி, தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளின் மேல் அபிஷேகம் செய்து விடுகின்றனர்.  நூற்றுக்கணக்கான குப்பை சேகரிப்பவர்கள், சிறுவர்கள் குப்பைத்தொட்டிகளைச் சரித்துக் கொட்டி, விலைபோகும் பொருள்களைப் பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள். இவ்வகைத் தொழில்தான் குப்பை வளாகங்களிலும் இரவு பகலாக நடக்கிறது.  சூப்பர் மார்க்கெட்டுகள், திருமண மண்டபங்கள், கையேந்தி பவன்கள், டாஸ்மாக் பார்கள், கசாப்புக் கடைகள், இளநீர் கடைக்காரர்கள், விடுதிகள் என்று எல்லா வியாபாரிகளும் மழைநீர் வடிகால்வாய்களை குப்பைத் தொட்டிகளாக உபயோகிப்பதே நடைமுறை உண்மை.  மாநகராட்சிகளுக்கு உண்மையான அக்கறையிருந்தால், இவ்வகை வியாபாரிகளிடமும், நடுத்தர மேல்தட்டு மக்களிடமும் தான், குப்பை குறைப்பு மற்றும் குப்பை பிரிப்பு போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை "சட்டமாக' இயற்றி, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.  மேலும் ஒப்பந்தப் பணியாளர்களோ, நகராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களோ, கையுறை, காலணி இல்லாமல் தான் துப்புரவுப் பணி செய்கிறார்கள். மழைநீர் வடிகால்வாய்களில், தகுந்த பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் அளிக்காமல், சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு தூர்வாரக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை செய்து இரண்டு வருடங்களாகின்றன. ஆயினும் நீதிமன்ற ஆணையை சற்றும் மதிக்காமல் மழைக்குப் பின்னால்கூட, நூற்றுக்கணக்கான மாநகராட்சிப் பணியாளர்கள், எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே, நாற்றம் பிடித்த மழைநீர் வடிகால்வாய்களில் இறங்கி தூர்வார பணிக்கப்பட்டார்கள்.  ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் சட்டத்துக்குப் புறம்பாக அவர்களது கழிவு நீர்க் குழாய்களை, மழைநீர் வடிகால்வாய்களுடன் இணைத்திருப்பது, தமிழகம் முழுவதுமே நடந்து வரும் விஷயம். நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இந்நிலையை மாற்றுவதற்கு முனைப்பான செயல்பாடு நிர்வாகங்களிடம் இல்லை.  சென்னையைச் சுற்றி பல வீடுகளிலும், நிறுவனங்களிலும், ஆலைகளிலும் இருந்து லாரி, பம்புகள் மூலம் அப்புறப்படுத்தும் கழிவு நீரை, ஒப்பந்ததாரர்களில் சிலர், சோம்பேறித்தனத்தினாலோ, டீசல் மிச்சம் பிடிக்க வேண்டியோ, சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லாமல், கூவத்திலோ அல்லது அருகிலுள்ள ஓடைகளிலோ, சப்தம் போடாமல் விட்டு விடுகின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், அரைகுறையாக சுத்திகரிப்பு செய்த சாக்கடை நீரை மீண்டும் நீர்நிலைகளிலேயே விட்டுவிடுகின்றன.  கடந்த 20 ஆண்டுகளாக ஒருமுறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் மெல்லிய பாலித்தீன் பைகளின் உபயோகம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 2002-ம் ஆண்டு, 20 மைக்ரானுக்குக் குறைவான மெல்லிய பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவ்வகை பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டோரின் மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இன்று எல்லாக் கோயில்களிலும், அர்ச்சனைகள்கூட கடவுள்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் வைத்துச் செய்யப்படுகிற அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு மங்கி விட்டது.  ஒவ்வோர் ஆண்டும், சென்னையில் மழைக் காலங்களில் நீர் வடியாமல் எல்லோரும் அவதிக்குள்ளாவதற்கு, இவ்வகை பாலித்தீன் பைகள், பொருள்கள், மழை நீர் வடிகால்வாய்களை அடைத்துக் கொள்வதே காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லா நீர் நிலைகளிலும் இவ்வகை பாலித்தீன் பைகள் மிதந்து கொண்டும், அடைத்துக் கொண்டும் உள்ளன. எவ்வளவு கோடிகளை, மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு செலவழித்தாலும், இந்நிலை நீடித்தால், பருவம் தவறாமல், தாக்கும் மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இவையெல்லாம், கீழ்த்தட்டு மக்களையும், அவர்களது குழந்தைகளையுமே அதிக அளவில் பாதிக்கின்றன.  பஞ்சாப், கோவா, மேற்கு வங்கம், தில்லி, ஒரிசா போன்ற மாநிலங்களில் 40 மைக்ரான் தடிமனுக்குக் கீழ் உள்ள பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 50 மைக்ரானுக்குக் குறைவாகவும், இமாசலப் பிரதேசத்தில் 70 மைக்ரானுக்குக் குறைவாகவும் தடிமன் உள்ள பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில்கூட, அதிரடியாக 150 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் வங்கதேசம், வேலை இழப்பிற்குப் பதில், புதிதாக ஆயிரக்கணக்கான சணல், மூங்கில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நிரந்தர வாழ்வாதாரம் உருவாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  உலக அளவில் கட்டட வல்லுநர்களுக்கு போட்டி வைத்து, கோயம்பேடு காய்கனி வளாகம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது எங்கு திரும்பினாலும், அழுகிய குப்பை வளாகமாகவும், திறந்தவெளிக் கழிப்பிடமாகவுமே காட்சியளிக்கிறது. காய்கனிக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயார் செய்யும் திட்டம்கூட இன்றைய அளவில் செயலற்று உள்ளது.  தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள் ஆகிய பிரச்னைகளுக்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரியான நீண்ட காலத் தீர்வுகள் எட்டப்படவில்லை. கடலூர், மேட்டூர் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களால், நிலத்தடி நீரும், காற்றும் பாழ்பட்ட நிலை ஆகிய எதிலுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அரைகுறை நடவடிக்கைகளினால், எந்த மாற்றமும் நிகழவில்லை. இன்றுவரை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே காட்சியளிக்கிறது.  கூவத்தை இனி சுத்தம் செய்வதற்கு வேண்டுமானால் சாய்பாபாவிடமிருந்து நிதி வேண்டியிருக்கலாம். ஆனால் கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

Dinamani (23-03-2010): கட்டுரைகள் - குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் - அ.நாராயணன்

குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் 
அ.​ நாராயணன் 
Published : 23 Mar 2010


சில மாதங்களுக்கு முன் துணை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் போய் வந்த பின்,​​ சென்னையில் உள்ள கூவம்,​​ பக்கிங்ஹாம் கால்வாய்,​​ அடையாறு உள்ளிட்ட சாக்கடைகளைச் சுத்திகரிப்பதற்கான திட்டங்கள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கூவத்தை தெளிந்த நீரோடையாக்கி அதில் குழந்தைகள் நீந்தி விளையாடினால்தான் திருப்தி என்று முதல்வர் கூட ஓராண்டுக்கு முன் பேசினார்.​ ஏற்கெனவே,​​ சென்னை நகர நீர்வழிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடிகளை சில ஆண்டுகளுக்கு முன் கூவத்திலே கரைத்துள்ளது நமது அரசு.​ இப்பொழுது சென்னையின் நீர்நிலைகளைச் சுத்தம் செய்வதற்கு வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ​ சிங்கப்பூர் மாதிரியின்படி,​​ புதிதாக சென்னை நதிநீர் அதிகார வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.​ இந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோளாக,​​ கூவம் சாக்கடையை ​(அடையாறு,​​ பக்கிங்ஹாம் அல்ல)​ ​ சுத்தம் செய்வதற்காக மட்டுமே மீண்டும் ரூ.1,200 கோடிகள் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னையில் நீர்நிலைகள் பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் அண்மையில் நடத்தப்பட்டது.​ இதில் பேசிய அதிகாரிகள் ​ கூவம் மாசுபட்டதற்கும்,​​ குறுகிவிட்டதற்கும் அதன் கரையில் உள்ள குடிசைப்பகுதிகளே முக்கிய காரணம் என்ற ரீதியில் பேசியுள்ளனர்.சேரி மக்களோ,​​ குழாய்த்தண்ணீர் கூட இல்லாமல்,​​ பிளாஸ்டிக் குடங்களும் கையுமாக லாரித்தண்ணீருக்காக தினமும் மணிக்கணக்காகக் காத்துக்கிடக்கிறார்கள்.​ தங்களின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டிய நேரத்தை சில குடங்கள் தண்ணீருக்காக வீணடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.​ அவர்கள் எப்படி,​​ அதிக அளவில் நீர் நிலைகளை மாசுபடுத்தப் போகிறார்கள்?​ கூவத்தின் கரைகளை,​​ திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதைத்தான் அரசு சூசகமாகக் குறிப்பிடுகிறது என்று எடுத்துக் கொண்டால்,​​ இது அவர்கள் குற்றமா அல்லது ஏழைகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளைத் தரமான வகையில் செய்து கொடுக்காமல்,​​ அவர்களை அழுக்கான சேரிகளாகவே பல ஆண்டுகளாக வைத்திருந்த அரசின் குற்றமா?ஏற்கெனவே,​​ குடிசைப்பகுதிகள் ஒவ்வொன்றாக அரசால் காலி செய்யப்பட்டு,​​ சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் அம்மக்கள் குடி வைக்கப்பட்டு வருகிறார்கள்.​ அடுத்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 82,000 சேரி குடும்பங்கள் நகருக்கு வெளியே துரத்தப்பட உள்ளனர்.​ ஆனால்,​​ அந்த மாற்று இடங்களில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட தரமாக,​​ நீண்டு நிலைக்கக்கூடியவாறு செய்யப்படவில்லை.​ சரியான திட்டமிடல் இல்லாமல் அவசர கோலத்தில் எடுக்கப்பட்டு வரும் இவ்வகை நடவடிக்கைகளால்,​​ மிகக் குறுகிய காலத்திலேயே புறநகர் ஏழைமக்களின் வாழிடச் சுற்றுச்சூழல் முன்பிருந்ததைவிட கேவலமாகி விடக்கூடிய அபாயமே உள்ளது.​ மேலும்,​​ புதிதாகக் குடியேற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் வேலைவாய்ப்பு,​​ கல்வி,​​ குடிநீர் போன்றவை சரிவர இல்லாமல் அவர்கள் நிலைமை,​​ குறிப்பாக குழந்தைகளின் நிலைமை வேகமாக சீரழிந்து வருகிறது.மேலும் கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்கான முதற்கட்டமாக,​​ அரசு கடைப்பிடிக்கும் இந்த நடவடிக்கை தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் விதமாக உள்ளது.​ அதாவது,​​ கூவத்தில் வந்து கலக்கும் நீர் சாக்கடையாக இருக்காமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கு பதில்,​​ கூவக்கரைகளை மட்டுமே அழகுபடுத்தும் வேலையாக மருவி வருகிறது.​ குடிசை மக்களை முதலில் குண்டுகட்டாகப் புலம்பெயரச் செய்யும் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரான நியாயமற்றது மட்டுமல்லாது,​​ மேலோட்டமாகவும்,​​ குன்றா வளர்ச்சியைப் புறக்கணிக்கும் விதமாகவும் உள்ளது.​ ஏதோ,​​ சென்னையை மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களுக்காக மட்டுமே தயார் செய்யும் மனப்பான்மையே வெளிப்படுகிறது.​ குடிசைப்பகுதிகள் எல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கங்கள் எனும் குறுகிய பார்வை எல்லோரையும் உள்ளடக்கிய மேம்பாடு எனும் கருத்துக்கு நேர் எதிரானது.​ கடுமையான கண்டனத்துக்கு உரியது.சென்னையில் குடியேறியுள்ள ஏழை மக்களின் நீர் பயன்பாடு மிகமிகக் குறைவு.​ குழாய் நீராகட்டும்,​​ நிலத்தடி நீராகட்டும் அவை முழுவதுமே,​​ நடுத்தட்டு,​​ மேல்தட்டு மக்களாலும் பெரிய,​​ பெரிய வணிக வளாகங்களாலும்,​​ அரசு நிறுவனங்களாலும்தான் ஒழுங்கு முறையின்றி செலவு செய்யப்படுகின்றன.​ இப்பொழுது பெயர்த்தெடுக்கப்படும் குடிசைப்பகுதிகள் மட்டும்தான் விதிமுறைக்கு உள்படாமல் அரசு நிலத்திலோ,​​ புறம்போக்கு இடங்களிலோ வந்தனவா?​ பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள்,​​ வணிக வளாகங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்தபடியும்,​​ விதிமுறைகளுக்கு உள்படாமலும் இஷ்டம் போல வளர்ந்துள்ளன எனும் உண்மை ஏன் கவனத்திற்கு உள்ளாவதில்லை?அடுக்குமாடிக் குடியிருப்புகளை நகருக்குள்ளேயே எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வளரவிட்டது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நெடுநாளைய குற்றம்.​ இப்படி வரைமுறையில்லாமல் கட்டடங்கள் முளைத்ததற்கும்,​​ ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே.​ நடுத்தர,​​ மேல்தட்டு மக்களின் ஜனத்தொகைக்கும்,​​ அவர்களது அதிகரித்து வரும் நுகர்வுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சென்னை கழிவுநீர் வாரியம் திணறி வருவது கண்கூடு.​ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறன்,​​ பாதாளச்சாக்கடைகளின் தரம் மற்றும் மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளது.சென்னை நகரம் கடல்மட்ட அளவில் தட்டையான நிலப்பரப்பு கொண்டது.​ அதனால்,​​ இயற்கையான நீர் ஓட்டம் இல்லாதது.​ சென்னை கழிவுநீர் வாரியத்தின் கீழ் 180 கழிவு நீரேற்று நிலையங்களும்,​​ 5 சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்குகின்றன.​ ஆனால்,​​ அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வளாகங்கள் வெளியேற்றும் பலகோடி லிட்டர் கழிவு நீரைத் தினமும் 24 மணி நேரம்,​​ 365 நாள்கள் தொடர்ச்சியாகப் பம்ப் செய்ய முடியாமலும்,​​ முழுமையாகச் சுத்திகரிப்பு செய்ய முடியாமலும் நிலையங்கள் திண்டாடி வருகின்றன என்பதுதான் நிதர்சனம்.​ அரைகுறையாகச் சுத்திகரிப்பு செய்வதற்கும்,​​ பராமரிப்புக்கும் செலவிடும் தொகைகளும்,​​ அதிக அளவு மின்சாரமும் விரயமாகி வருகின்றன.இப்பொழுது,​​ புதிய திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.​ இதில் சுமார் ரூ.​ 320 கோடி,​​ புதிய மழை நீர் கால்வாய் கட்டுவதற்கும,​​ ஏற்கெனவே உள்ள கால்வாய்களைச் சீர்செய்வதற்கும் செலவிடப்படுகின்றன.​ மற்றொரு 200 கோடி ரூபாய் கூவத்தின் கரைகளை மராமத்து செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வளவு காலம்,​​ பல கோடிகளை உலக வங்கியிடம் கடனாகப் பெற்று சென்னையிலும்,​​ பிற பகுதிகளிலும் அரசு ஏகப்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் கால்வாய்கள் கட்டியுள்ளது.​ நடைமுறையில் மழைநீருக்குப் பதிலாக ஹோட்டல்கள்,​​ வளாகங்கள்,​​ வீடுகள் என்று எல்லோருமே சட்டத்துக்குப் புறம்பாக கழிவு நீரை வெளியேற்றும் கால்வாய்களாகத்தான் இவை உள்ளன.​ மேலும்,​​ பிளாஸ்டிக் முதலான குப்பைகளை கொட்டிவைக்கும் தொடர் குப்பைத் தொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.​ இதனால் கோடிகளை விழுங்கியுள்ள மழைநீர் கால்வாய்கள்,​​ அவை கட்டப்படும் நோக்கத்தை முற்றிலும் இழந்துவிடுகின்றன.பொதுப்பணிகளில், ​​ உச்சகட்ட ஊழல் நிலவுவதாலோ என்னவோ,​​ பாதாளச் ​ சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளில் எந்தவிதமான தரக்கட்டுப்பாடும்,​​ மேற்பார்வையும் இருப்பதாகத் தெரியவில்லை.​ சாக்கடைகளும்,​​ அதன் மூடிகளும் ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பாதிப்புடன்தான் காட்சியளிக்கின்றன.​ நகர நிர்வாகத்துறையிலும்,​​ பொதுப்பணித்துறையிலும் இப்படிப்பட்ட ஊழல் இருக்கும் வரையில் கூவம் மட்டுமல்ல,​​ தமிழகத்தின் எல்லா நீர்நிலைகளும் தொடர்ந்து நாறப்போவது நிச்சயம்.துணை முதல்வர் தன் கீழ் வைத்திருக்கும் உள்ளாட்சி மற்றும் நீர்வழங்கல்துறை தொலைநோக்குப் பார்வையோ,​​ அறிவியல் அணுகுமுறையோ இல்லாமல் வெள்ளையானையாக உள்ளதாகவேபடுகிறது.​ ஐ.ஐ.டி.,​​ அண்ணா பல்கலைக்கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களால் நாட்டுக்கு என்ன பயன் என்பதே புரியவில்லை?​ இதனால்தான்,​​ நாம் சிங்கப்பூர்,​​ மலேசியா என்று சாக்கடைநீர் நிர்வாகத்துக்கும்,​​ குப்பை மேலாண்மைக்கும் கூட தொழில்நுட்பத்துக்காக வெளிநாடுகளை அண்ட வேண்டியுள்ளது.திடக்கழிவு மேலாண்மையும்,​​ கழிவுநீர் மேலாண்மையும்,​​ நீர்நிலைகள் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற புரிதல் அரசுக்கு உள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது.​ திடக்கழிவு மேலாண்மைக்காக எந்தவித தொலைநோக்குத் திட்டமும்,​​ தெளிவான சிந்தனையும் இருப்பதற்கான அறிகுறிகள்கூட அரசிடமிருந்து வெளிப்படவில்லை.​ திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு மாற்றாக பாதாளச் ​ சாக்கடைத்திட்டங்கள் மட்டுமே என்ற அணுகுமுறையே முற்றிலும் தவறானது.​ குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பது.சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லோரையும் பாதிக்கிறது.​ ஆனால்,​​ சமூக பொருளாதாரத்தளத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக குலைக்கிறது.​ ஏழைக்குழந்தைகளின் மேம்பாட்டை முறிக்கிறது என்ற புரிதல் அவசியம்.​ அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடுதான் சமூக நீதி என்பதாக அர்த்தம் இல்லை.​ கழிவுநீர் மேலாண்மை,​​ திடக்கழிவு மேலாண்மை,​​ மாசுக்கட்டுப்பாடு,​​ கழிப்பிடப்புரட்சி,​​ இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

Dinamani (02-07-2010): கட்டுரைகள் - மீண்டும் லாட்டரி ஓநாய்களா? - அ.நாராயணன்

மீண்டும் லாட்டரி ஓநாய்களா? 
அ. நாராயணன்
Published : 02 Jul 2010 
 
 


 



மகனின் தீவிரக் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, குடும்பத்தோடு 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை என கடந்த மாதம் தினசரிகளில் வெளிவந்தது ஒரு நிகழ்வு. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இன்று மிகச் சாதாரணமாகி விட்டன. தமிழகக் குடும்பங்கள் டாஸ்மாக் மது அரக்கனிடம் சிக்கிச் சீரழிந்து வரும் இன்றைய நிலையில், தமிழக அரசு லாட்டரி வர்த்தகத்துக்கு மீண்டும் பச்சைக்கொடி காட்ட இருக்கிறது என்று ஊகங்களின் அடிப்படையில் செய்தி வருகிறது. இச்செய்தி சமுதாயப் பற்றுள்ளோரின் வயிற்றில் புளியை அல்ல, திராவகத்தையே கரைப்பதாக உள்ளது. மக்கள் இரண்டாவது முறை ஆட்சிக்கு வாய்ப்புக் கொடுத்தபோதும், ஜனநாயக நெறிமுறைகளைத் துச்சமெனப் பறக்கவிட்டு, தடாலடி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவர் 2004-ம் ஆண்டு, சாராய சில்லறை விற்பனையைத் தனியாரிடமிருந்து பிடுங்கி, அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் துவக்கினார். இதில் தவறுகாண முடியாது எனினும், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி, கிட்டத்தட்ட 8,000 கடைகளை விரிவுபடுத்திய மோசமான செயல்பாடு தான், இன்றைய ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் ஒரு பெரிய ஆக்டோபஸôக விஸ்வரூபம் எடுத்தமைக்கு வித்திட்டது எனலாம். ஆனால், இதே ஜெயலலிதாதான் 2003-ம் ஆண்டு ஜனவரியில் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் தமிழகத்தில் லாட்டரி வணிகத்தை ஒழித்துக்கட்டினார். அதன் விளைவாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்மூலம் ஆகிவிடாமல் பிழைப்பதற்கான அரிய வாய்ப்புக் கிட்டியது. அன்றைக்கு ஜெயலலிதா லாட்டரி வணிகத்தை ஒழித்ததற்கான உண்மைக் காரணங்கள் வேறு ஏதேனும் இருக்கலாம். ஆனாலும், எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் மற்றும்  குதிரைப் பந்தயம் ஒழிப்பு போன்றே, தமிழகத்தில் லாட்டரி ஒழிக்கப்பட்டதும்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. 2003-ம் ஆண்டு லாட்டரி ஒழிக்கப்படுவதற்கு முன்பு, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.53 கோடி தான் அரசின் வருமானமாக வந்தது. ஆனால், லாட்டரி முதலாளிகளுக்கோ நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் தங்கச் சுரங்கமாக இருந்தது என்றால் மிகையில்லை. போலி லாட்டரிகள் தான் சந்தையில் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டதாகப் பேசப்பட்டது. லாட்டரி ஒழிக்கப்பட்டபோது, அதை நம்பி சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர், அதிலும் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் பார்வையற்றோர் தங்கள் வேலையை இழந்தனர். அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறுவதற்கு முன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருக்கக் கூடும் என்பதையும் வேலையிழப்பின் பாதிப்பிலிருந்து பலர் இன்னும் மீண்டிருக்க மாட்டார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், லாட்டரியால் ஏற்படும் சிறு சிறு நன்மைகளை விட, மிகப் பெரும் தீமைகள் தான் அதிகம். லாட்டரி விற்பனைக்காகவே கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன. காலை ஆறேழு மணிக்கே ஏழை எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகள் முன் திரண்டனர். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், லாட்டரிச் சீட்டுகளைக் கத்தைகத்தையாக வாங்குவதும், இடைவிடாமல் சுரண்டிப்பார்த்து ஏமாறுவதுமாக, நாள்களைக் கழித்தனர். லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டிச்சுரண்டியே, தமிழர்களின் நகங்களும், தமிழச்சிகளின் வாழ்வும் தேய்ந்தன. பகலில், அதிர்ஷ்ட லட்சுமிகளாக உருவகப்படுத்தப்பட்டன லாட்டரி டிக்கெட்டுகள். அவையே இரவானால், துரதிருஷ்ட தேவதைகளாக கடைகளுக்கு முன் குப்பைகள் வடிவில், குவியல் குவியலாகச் சிதறிக்கிடப்பது வாடிக்கையான நிகழ்வானது. பேப்பர் லாட்டரிகள் போதாதென்று, ஆன்லைன் லாட்டரிகளும் பேய்களாக, பிசாசுகளாக மக்களை ஆட்டிப்படைத்தன. சோம்பேறிகளாக முடக்கிப்போட்டன. ஆன்லைன் லாட்டரிக்கடைகள் பார்த்தீனியச் செடிகள் போன்று தமிழகமெங்கும் பரவத்தொடங்கின. குடி மட்டுமல்லாது லாட்டரிகளுக்காகவும், குடும்பச் சொத்துகள் அழிக்கப்பட்டன. ஆனால், ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்நிகழ்வுகள் மக்களால் கொடுங்கனவுகளாக மறக்கப்பட்டு விட்டன. 1997-98-ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்த போது ஒற்றை எண் லாட்டரியை ஓர்  அவசரச்சட்டம் மூலம் தடை செய்தார். பின்னர் 1999-ம் ஆண்டு, தேசிய அளவில் எல்லா லாட்டரிகளையும் ஒழிக்கும் லாட்டரி (ஒழிப்பு) மசோதா ஒன்று, மாநிலங்களவையில் அன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், முற்போக்கான இந்த லாட்டரி தடை மசோதா, கடந்த 10 ஆண்டுகளாக சட்டமாக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த மசோதாவை மத்திய அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் வாபஸ் வாங்க முனைந்தார். ஆனால், மிகப் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பால், அவரால் அதை அப்போது செய்ய முடியவில்லை. சில மாநில அரசுகளிடம் ஒத்தகருத்தை உருவாக்க முடியவில்லை என்று சாக்குப்போக்கு காட்டி, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் இருந்து வெற்றிகரமாக அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. லாட்டரி (ஒழிப்பு) மசோதா விரிவான விவாதத்துக்கு உள்படுத்தப்படாமல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் தருவாயில், அதிக சத்தமில்லாமல் வாபஸ் பெறப்பட்டதில், என்ன விதமான சிதம்பர ரகசியம் அடங்கியுள்ளது எனும் சந்தேகம் வலுக்கிறது. தமிழகத்தில் லாட்டரி தடையை எதிர்த்து, லாட்டரி முதலாளிகள், 2003}ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடியது இன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. லாட்டரி ஒழிப்பு மசோதாவுக்குப் பதிலாக, லாட்டரி ஒழுங்கு விதி 2010 எனும் புதிய மசோதாவைக் கொண்டு வந்து, லாட்டரி முதலாளிகளுக்குப் புழக்கடைக்கதவைத் திறந்துவிடும் கேவலமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. லாட்டரிச் சந்தையை ஒழுங்குபடுத்தி, அரசுகளுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் பாதுகாப்போம் எனும் ரீதியில் பேசுகிறார் சிதம்பரம். கேரள மாநில அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, ஆன்லைன் லாட்டரியை அங்கீகரிப்பதன் மூலம், உள்நாட்டு ஆன்லைன் லாட்டரி கும்பல்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட மாஃபியாக்களுக்கும், மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரிக்க இருக்கிறதோ என்றும் சந்தேகப்பட வேண்டியுள்ளது.ஆனால், லாட்டரி விற்பனை என்பதே கோடிக்கணக்கான குடும்பங்களை அழித்தொழிக்கும் ஒரு சாபக்கேடு என்று பல ஆண்டுகளாக லாட்டரி ஒழிப்பில் ஆர்வம் காட்டி வரும் பா.ஜ.க.வின் தேசியச் செயலர் விஜய் கோயல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த உண்மையை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது இன்றைய மத்திய அரசு. ஹவாலா மூலம் லாட்டரித் தொழிலை இந்தியா முழுவதும் செய்து வருபவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோடு வெளிப்படையாக உறவு கொண்டாடி வருவதாக சமீபத்தில் வரும் செய்திகள் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. "விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற நேர்மையான கோஷத்துடன், தமிழகத்தில் லாட்டரி விற்பனையை 1968-ல் துவக்கியது தி.மு.க.வின் நிறுவனர் அன்றைய முதல்வர் அண்ணாதான். பேரறிஞராய் இருந்தாலும், பிற்காலத்தில் நேர்மையற்ற ஆட்சியாளர்களால் இந்த லாட்டரித் தொழில் ஒரு மாஃபியாவாக உருவெடுக்கும் என்றும், லட்சக்கணக்கான ஏழை மக்கள், இந்த சூதாட்ட வலையில் சிக்கி சித்தப் பிரமை பிடித்து அழிந்தொழிவார்கள் என்றும் முன்கூட்டியே கணிக்கத்தவறி விட்டார். அந்த மனிதநேயர் உயிருடன் இருந்திருந்தால், பிற்காலத்தில்  லாட்டரியால் மக்கள் சீரழிவதை ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார் என்பதை மட்டும் உறுதிபடக் கூற முடியும். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குள்ள தடை என்றென்றும் நீடிக்கும் என்றும் போலி லாட்டரிகளை ஒழிக்க தீவிர சட்ட நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரங்களும் செய்யப்படும் என்றும் உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், வருமான நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியுள்ளது எனும் சாக்கில், மீண்டும் லாட்டரிச் சீட்டுகளை தமிழகக் கடைவீதிகளில் உலவ விட்டால், அதைவிட மிகக் கேவலமான, பிற்போக்குத்தனமான, சமூக விரோதமான நடவடிக்கை வேறேதும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தை எதிர்த்தும், மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் புழக்கடைக்கதவு மசோதாவை எதிர்த்தும் சமூகத்தில் அக்கறை கொண்டுள்ள சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் கூட்டாகக் குரல் எழுப்ப வேண்டும். லாட்டரிச் சந்தையை எதிர்த்து ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுக்கவும், மக்களைத்திரட்டவும், பொதுக்கருத்தை உருவாக்கவும் தயங்கக்கூடாது. கடந்த மாதம் மத்திய அரசு லாட்டரி தடைச்சட்ட மசோதாவை திரும்பப் பெற்றதற்கு, அமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி கூறியுள்ளனர் தமிழக லாட்டரி முதலாளிகள். அதோடு, தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும்  கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில்  நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.செம்மொழித் தமிழச்சிகளே... ஓநாய் ஊளையிடும் குரல் மிக அருகில் கேட்கிறது. உங்கள் வீட்டு ஆடுகளைப் பாதுகாக்கத் தயாராகுங்கள். உஷார்!

Dinamani (21-5-2010): கட்டுரைகள் - நெஞ்சில் உரமும் இல்லை;​ நேர்மைத் திறமும் இல்லை! - அ.நாராயணன்

நெஞ்சில் உரமும் இல்லை;​ நேர்மைத் திறமும் இல்லை!

அ.​ நாராயணன்
First Published : 21 May 2010


 
உலக மகா அதிசயம்.​ அதுவும்,​​ களைத்துப்போன தொழிலாளர்களின் உடல் வலிக்குக் ​ கட்டாயம் சாராயம் வேண்டும் என்றே நேற்று வரை கருதி வந்த கம்யூனிஸ்டுகள் கூட,​​ டாஸ்மாக் சாராயம் ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று இன்று ஒத்துக் கொண்டுள்ள அதிசயம்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்,​​ பா.ம.க.,​​ கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மதுப்பழக்கத்தைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ள நிகழ்வு வரவேற்க வேண்டிய மாற்றம்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவபுண்ணியம்,​​ ஆறரைக் கோடி மக்களில்,​​ இரண்டு கோடி மக்கள் டாஸ்மாக் சாராயத்தில் கரைகிறார்களே,​​ இது என்ன வளர்ச்சி என்று கூறி புண்ணியம் தேடிக் கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ.​ கட்சித் தலைவர் நல்லகண்ணுவிடம் வரைமுறையற்ற டாஸ்மாக் சாராய வியாபாரம் பற்றிக் கருத்து பரிமாறிக் கொண்டபொழுது,​​ ""அது தான் வருமானம் வேணும்னுதான் முச்சந்தியில் எல்லாம் கவர்மெண்ட் சாராயக்கடை வெச்சிருக்கிறாங்களே,​​ மேலும் குடிகாரனாகப் பார்த்து திருந்தினாத்தான் உண்டு'' என்று பேசினார்.​ அனுபவம் மிக்க அரசியல் தலைவர்களிடம் கூட,​​ இந்தியாவில் ​ அசுர வளர்ச்சி பெற்று எல்லா சமூகத்தினரையும் புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சாராயச் சந்தையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை.இன்றைக்கு இந்திய மக்களின் மிகப்பெரிய பொது எதிரியானது சாராயச் சந்தைதான் என்றால் மிகையில்லை.​ தமிழக அரசு தனது மிகக் கேவலமான சாராய வருமான மூர்க்கத்தனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளவில்லை என்றால்,​​ இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில்,​​ தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகாத இளைஞர்களை-மதுவால் ​ பாதிக்கப்படாத குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.​ இதை ஏதோ வீரியத்துடன் எழுத வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை.​ மதுப்புழக்கத்தால்,​​ சமூகம்,​​ பொருளாதாரம்,​​ மனித வளம்,​​ கலாசாரம்,​​ நடத்தை மற்றும் ஒழுக்கவியல்,​​ சுகாதாரம் போன்ற பல்வேறு தளங்களில் மிக வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நுணுக்கமான பாதிப்புகளைக் கூட தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து புரிந்து வைத்திருப்பதால் தான் இதனை உறுதியுடன் கூற முடிகிறது.​ இன்றைக்கு எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் இளைஞர்களைக் காண முடிவதில்லை.​ இளைஞர்கள் நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.​ மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள்,​​ கூடிக் களிக்கும்-இல்லையில்லை-விட்டில் பூச்சிகளாக விழுந்து கொண்டிருக்கும் இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் உள்ளன.தமிழகம் முழுவதுமுள்ள ​(அரசின் அடுத்த சாதனையாக கட்டிக் கொண்டிருக்கிற பிரம்மாண்டமான அண்ணா நூலகம் உள்பட)​ நூலகங்கள்,​​ இளைஞர்களைக் கவர்வது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.ஜூன் மாதக் கடைசியில் ​ கோவையில் அரசு நடத்த இருக்கும் செம்மொழி மாநாடு வரலாறு படைக்குமா என்பது வேண்டுமானால் கேள்வியாக இருக்கலாம்.​ ஆனால்,​​ மாநாடு நடக்க இருக்கும் வாரத்தில்,​​ கோவை மாவட்ட டாஸ்மாக் சாராய விற்பனை புதிய சாதனை படைக்கும் என்பதை இன்றே உறுதியுடன் கூற முடியும்.தமிழக அரசு,​​ டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்,​​ ஊழியர்கள்,​​ சாராய நிறுவனங்கள்,​​ இடைத்தரகர்கள்,​​ கட்சிக்காரர்கள் எல்லோரும் இணைந்து கொள்ளையடிக்கும் மையப் புள்ளியாக,​​ மாஃபியாவாக,​​ டாஸ்மாக் சந்தை மாறி உள்ளது.​ இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிழல் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ எல்லாவகை குற்றங்களுக்குமான இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் மாறிவிட்டன.​ ​​ இந்தியா முழுவதுமே மதுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது.​ அதிலும்,​​ தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்குவதற்கே,​​ மது வருமானத்தைத்தான் மிக அதிகமாக நம்பியுள்ள நிலை உள்ளது.​ அதனால்,​​ தமிழக அரசு மிக வேகமாக மது விற்பனையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளது.​ மற்ற அண்டை மாநில அரசுகளும் தமிழக அரசின் வெற்றி பார்முலாவை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றன.எதிர்க்கட்சிகளிடமும்,​​ பொது மக்களிடமும் இந்த மது வியாபாரம் ஒரு சுனாமி போன்று உருவெடுத்துள்ளது என்ற பொதுக் கருத்து இல்லாமையால்தான்,​​ தமிழக அரசால்,​​ இப்படி பொது நன்மையை முற்றிலும் முறிக்கும் கொள்கையைச் செயல்படுத்த முடிகிறது.எதிர்காலத்தில்,​​ மற்றொரு அரசோ அல்லது இன்றைய ஆளுங்கட்சி அரசோ கூட மதுவிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற முற்போக்கு நடவடிக்கை எடுக்க நினைத்தால்,​​ முடியாது போய்விடும்.​ ஏனென்றால்,​​ இந்த நிழல் உலகத்தில் பலரது தொழில்,​​ வருமானம் பாதிக்கப்படும்.​ அதனை அவர்கள் விட்டுவிட மாட்டார்கள்.​ மதுச் சந்தை மூலம் சுலபமாக குறுக்கு வழியில் வருமானம் ஈட்டி வருபவர்கள்,​​ நாளை தங்கள் வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த ஒரு பாதகச் செயலிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள்.​ இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்கள் குடிநோயில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.​ அரசு நடத்தும் குடிநோய் மையங்கள் தமிழகத்தில் மொத்தமே எட்டு ​ மருத்துவமனைகளில்தான் உள்ளன.​ இந்த நிலையில்,​​ ஊருக்கு ஊர் தனியார்கள்,​​ குடி சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.​ இவ்வகை குடிசிகிச்சை மையங்களில்,​​ 90 சிகிச்சை மையங்கள் போலியானவை.​ "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற ​ விரக்தி மனநிலையில் உள்ள மனைவிமார்கள்,​​ தங்கள் குடிநோயுள்ள கணவர்களை இப்போலி மையங்களில் சேர்த்து எப்படியாவது குணமடைய வேண்டும் என்று கடன் வாங்கியாவது செலவு செய்கின்றனர்.​ ஆனால்,​​ சிகிச்சை என்ற பெயரில்,​​ இங்கு துன்புறுத்தலும்,​​ அறிவியல் சாராத ஏமாற்று சிகிச்சைகளும்தான் அளிக்கப்படுகின்றன.போலி மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு,​​ இம்மையங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.​ அரசே,​​ தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் குடிமுறிவு மையங்களை ஏற்படுத்தினால்தான் இவ்வகை போலி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட முடியும்.​ குடிநோயில் இருந்து ஒருவரை மீட்பது மிகமிகக் கடினம்.​ மீட்டாலும் அது மிகத் தாற்காலிக நடவடிக்கையாகவே இருக்க முடியும்.​ ஆனால்,​​ குடிநோய் வராமல் ​ தடுப்பது சுலபம்.​ ​​ போலி குடிமுறிவு மையங்களைப் போலவே,​​ சித்தா,​​ ஆயுர்வேதா,​​ யுனானி என்று விதவிதமான போலி குடிநோய் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடை பரப்பி உள்ளனர்.​ இப்படிப்பட்ட போலி மருத்துவர்களின் விளம்பரங்களை ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டே வெளியிடும் பத்திரிகைகளை என்னவென்று சொல்வது.​ பல மனைவிமார்கள் இவ்வகை போலி மருத்துவர்களிடம்,​​ குளிகைகளையும்,​​ மருந்துப்பொடிகளையும் மிகுந்த விலை கொடுத்து வாங்கி ரகசியமாக கணவர்களுக்கு உணவிலும்,​​ பாலிலும் கலந்து கொடுத்து ​(மருத்துவர் அறிவுரைப்படி)​ ஏமாந்துபோய் வருவது சகஜமாகி விட்டது.தாய்மார்களோ,​​ இந்தப் போலி குளிகைகளுக்காக,​​ தங்கள் தாலிகளைக் கூட அடமானம் வைக்கிறார்கள்.​ தமிழக அரசோ,​​ சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது.​ சமீபத்தில் சென்னைக்கு அருகில் புழல் பகுதியில் உள்ள 50 பள்ளிகளில் படிக்கும் 13-16 வயதுக்குள்பட்ட மாணவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 11 சதவிகிதம் பள்ளி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் என்று தெரிய வந்ததுள்ளது.​ இந்த 11 சதவிகிதம் இன்னும் சில ஆண்டுகளில் 30 சதவிகிதம் ஆகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.​ ஏனென்றால்,​​ அரசின் மது விற்பனை நடவடிக்கைகள் அத்தனை கேவலமாக உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்,​​ நாட்டின் இன்றைய நிலவரத்தைப் பற்றியும்,​​ எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியும் உச்சகட்ட அலட்சியத்தைத் தன்னுள் கொண்டுள்ளனர்.எந்த ஒரு பள்ளி மாணவனும் பள்ளிக்கு வரும் போதும்,​​ வீடு திரும்பும் போதும் டாஸ்மாக் கடையைத் தாண்டாமல் போக முடியாது என்ற நிலையே உள்ளது.​ சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது,​​ இதனால் வேலை இழப்பு ஏற்படுமே என்ற கேள்வியைத் தான் ​ ​ ​ புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டுள்ளார்.​ ​​ நடு இரவில் தோன்றிய கடவுளிடம்,​​ நாளை காலை உலகில் யாருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கக் கூடாது என்று வரம் கேட்டு,​​ கடவுள் அருள் புரிந்தால் என்ன ஆகும்?எய்ட்ஸ் நோயை நம்பி,​​ கடை பரப்பியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள்,​​ மருந்து நிறுவனங்கள்,​​ ஆராய்ச்சி நிறுவனங்கள்,​​ மருத்துவர்கள்,​​ செவிலியர்கள்,​​ விளம்பர நிறுவனங்கள்,​​ அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை ஊழியர்கள் எல்லோருக்கும் அடுத்த நாள் காலையே வேலை போய்விடும்.​ அதனால்,​​ நாட்டில் எப்பொழுதும எய்ட்ஸ் நிலைத்துநின்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறாரா முதலமைச்சர்.​ டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால்,​​ 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம்,​​ பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.""நெஞ்சில் உரமும் இன்றி,​​ நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே,​​ வாய்ச்சொல்லில் வீரரடி.''

Dinamani (29-04-2010): கட்டுரைகள் - அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! - அ.நாராயணன்

அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! 
By அ. நாராயணன் 
29 Apr 2010 



அதிகரித்து வரும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரத்தின் அடையாளமாகத் தமிழகம் முழுவதும், ஏழை பணக்காரர், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், பெரியவர்கள்  முதல் பள்ளிச் சிறுவர் வரை எல்லோரும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகிறோம்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும்  பிளாஸ்டிக்குகளின் பல வகையான பாதிப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல நீரோடைகளை இன்றைக்கு குட்டைகளாக மாற்றியதில் இவ்வகை பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மலேரியா, யானைக்கால், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்களின் அசுர வளர்ச்சிக்கும் நீர்நிலைகள் மற்றும் சாக்கடைகளை பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரும் கண்டு கொண்டதற்கான அறிகுறிகளே இல்லை.
பிளாஸ்டிக் பொருள்கள் சாக்கடைகளை அடைத்துக் கொண்டு, கழிவுநீர் தெருவில் வழிந்தோடும் போது, அடைப்பை இயந்திரம் கொண்டு சரி செய்ய இயலாமல் போகிறது. இதனால், சக மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாதாளச்சாக்கடைகளுக்குள் இறங்க வேண்டிய நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
÷கோயில் அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம் முதல், உணவு விடுதிகளில் பார்சல் வரை, கையேந்தி பவன், டாஸ்மாக் பார்கள் முதல் அசைவக்கடைகள் வரை, ஆபத்தான மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேக்கேஜுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தனையும் பின்னர் சாலைகளையும், குப்பை மேடுகளையும் வந்தடைகின்றன.
நகரங்களில் துரத்தி விடப்பட்ட மாடுகளாய் இருந்தாலும் சரி, கிராமங்களில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படும் கால்நடைகளாய் இருந்தாலும் சரி, எல்லா உயிர்களும் மீந்த உணவுகளுடன் சேர்ந்து தூக்கி எறியப்பட்ட ஆபத்தான பிளாஸ்டிக்குகளை விழுங்கி விட்டு இறக்க நேரிடுகிறது. கன்றுக்குட்டிகள் கூட பிளாஸ்டிக்கை விழுங்கியதால் இறப்பது தமிழக கிராமங்களில் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஆண்டு சென்னை கால்நடை மருத்துவமனையில் இறந்து போன ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து, 45 கிலோ எடையுள்ள  பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டபோது, மருத்துவர்களே திகைத்துப் போனார்கள்.
பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் விழுங்குவதால், பசு மற்றும் எருமைப் பாலில் எவ்வகையான நச்சுப் பொருள்கள் கலக்கின்றன எனும் ஆராய்ச்சியை சமீபத்தில் துவக்கியுள்ளது கால்நடைப் பல்கலைக்கழகம்.
÷கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவையும் மிதக்கும் பிளாஸ்டிக் துகள்களை விழுங்கிவிடுகின்றன. இப்படி, மீன் உணவாய் இருந்தாலும், பசும்பால், மாமிசம் போன்றவையாய் இருந்தாலும் உணவுச் சங்கிலியிலேயே பிளாஸ்டிக்கின் நச்சு, வேகமாகக்  கலந்து வருகிறது.
÷இன்று பெரும்பாலான வீடுகளில், பல விதமான சாயங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்களில்தான் குடிநீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதுவும் மிகவும் ஆபத்து நிறைந்தது.
÷கோடைக்காலங்களில் குடம் சிறிது சூடாகும் போது கூட கசிவு மூலம், ஆபத்தான உலோகம் கொண்ட வேதிப் பொருள்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புகள் உண்டு.
÷இவை எல்லாவற்றையும் விட பரிதாபகரமானது, மறுசுழற்சி செய்யப்படும் சிறிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைதான். படிக்காத, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வகை ஆலைகளில் வேலை செய்கின்றனர்.
÷சில நேரம், ஆலையின் நிறுவனரே மறுசுழற்சி வேலையிலும் ஈடுபட்டிருப்பார். இவர்கள் எல்லோரும் மறுசுழற்சியின் போது வெளிப்படும் நச்சுக்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டு இருப்பவர்கள். நரம்புத்தளர்ச்சி, மலட்டுத்தன்மை, ஒவ்வாமை, சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, காசநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையில் தினமும் தவறாது வேலை செய்து வருகிறார்கள்.
அதேபோல, பெரும்பாலான மக்களின் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரம் வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் சேகரித்து எடுத்து மறுசுழற்சிக்குக் கொடுப்பதற்காக என்று ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். ÷இருபத்தோராம் நூற்றாண்டில் பெரும்பாலான தலித்துகளுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்து, ஓர் உள்ஜாதியை உருவாக்கி வைத்துள்ளோம். நவீனமயமாக்கலில் தோன்றிய விபரீத வருணாசிரமத்தின் இன்றைய புதிய வெளிப்பாடுதான் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள்.
÷நலிவுற்ற தாய்மார்கள் முதல் கஞ்சா நுகரும் சிறுவர்கள் வரை, சமூகம் வீசி எறிவதைச் சேகரித்து எடுத்து, வயிறு வளர்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். குப்பை வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த வளாகங்களுக்கு அருகில் வசிப்போருக்கு, மற்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
பெருங்குடி குப்பை வளாகத்துக்கு அருகில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் கூட "டையாக்சின்'  போன்ற நச்சு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டுவந்தன.
2002-ம் ஆண்டு மே மாதம் இவ்வகை பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய ஆளும் கட்சியால், தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக்குக்கு எதிராக பொதுக்கருத்தும் உருவானது.
÷மசோதாவுக்கு ஆதரவாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு மணி நேரம் சட்டசபையில் பேசினார். ஆனால், பிளாஸ்டிக் நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினால், அன்று மதியம் நிறைவேற வேண்டிய மசோதா திடீரென்று அரசால் ஒத்தி வைக்கப்பட்டது.
 பின்னர் 2003-ம் ஆண்டு, 60 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை, இதனைப் பற்றிய நீண்ட மவுனமே, அரசின் பதிலாக உள்ளது.
கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பாக, இந்த மசோதாவைச் சட்டமாக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு தில்லி அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின.
தில்லி மட்டுமல்லாது, சண்டீகர், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், காஷ்மீர், மும்பை போன்ற பல மாநிலங்களிலும், நகரங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே மேற்சொன்ன மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு சட்டமாக்க வேண்டும்.
÷இவ்வகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு நஷ்ட ஈடோ, மானியமோ, வட்டியில்லாத கடன் வசதியோ அளித்து மாற்றுத் தொழில்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்விதமாக வேலை இழப்புகளைச் சரி செய்ய முடியும்.
ஆக, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
இத்தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தமிழ் மண்ணைப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் போக முடியும்.

Dinamani (15-11-2010): கட்டுரைகள் - சாலைகள் நரபலி பீடங்களா? - அ.நாராயணன்

சாலைகள் நரபலி பீடங்களா? 


By அ. நாராயணன் 
15 Nov 2010 

சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் செய்தி ஒவ்வொரு நாளும் உள்ளத்தைச் சுட்டெரிக்கிறது, இதயத்தை அலைக்கழிக்கச் செய்கிறது என்று தமிழக முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஒவ்வொரு நாளும் உள்ளத்தை உலுக்குகிற விபத்துகள், நெஞ்சைப் பிழியும் கோரச்சாவுகள், இந்த விபத்துகள் குறைய வழியே இல்லையா என்று பெருமூச்சு விடுவதாகவும், வாகன ஓட்டிகளுக்கு 8-ம் வகுப்பு வரையிலாவது கல்வித்தகுதி அவசியம் என்று கருதுவதாகவும் அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்தார். நாடு வாழுமா, நல்லது நடக்குமா என்பதை நல்லோரே, நீவிர் தான் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். முதல்வர் கூறியபடி எண்ணிப்பார்த்து, நல்லது நடக்குமா என்ற ஆதங்கத்தில், சில உண்மைகளைத் தோண்டித் துருவி எடுத்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
 செம்மொழி மாநாட்டுக் கண்கவர் விழாவில், முதல்வர் தலைமையில் கோவையில் லட்சக்கணக்கானோர் தமிழமுதம் பருகிக் களித்திருந்தபோது, தருமபுரியில் உள்ள பாலக்கோடு, அவலத்தின் உச்சியில் வீறிட்டுக் கதறியது. திருமண கோஷ்டியை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து, 18 உயிர்கள் நசுங்கிச் செத்ததற்கும், 35 பேர் பல்வேறு வகைகளில் படுகாயம் அடைந்ததற்கும், டிரைவரின் கல்வித் தகுதியின்மையா காரணம்? மினி லாரியை ஓட்டுவதற்கு முன், அரசு நடத்தும் டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில், குமரவேல், சரக்கு அடித்த தகுதியின்மைதான் காரணம். சந்தேகம் இருந்தால், ஐ.ஜி. சிவனாண்டியையும், தருமபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் அமுதாவையும் தமிழக முதல்வர் நினைவுகூரச் சொல்லலாம்.
 ஓட்டுநர்களுக்கு 8-ம் வகுப்பு கல்வித்தகுதியை உறுதி செய்வது நல்ல முற்போக்கு நடவடிக்கைதான். ஆனால், முச்சந்திகள்தோறும் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களில் குடித்துவிட்டு, குறைந்தபட்சமாக 10 லட்சம் பேர்களாவது தினமும் சட்ட விரோதமாக வண்டி ஓட்டுகிறார்கள். இதைத் தடுக்காமல், பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறதே முதல்வரின் கீழுள்ள உள்துறை. கூட்டம் கூட்டமாகக் குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுப்பதற்கு முதல்வர் தனது சுண்டு விரலை அசைத்தால்கூட, சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க முடியுமே!
 ஒரு சில புள்ளிவிவரங்களையாவது கணக்குப் போட்டுப் பார்க்கலாம். 2004-2005-ம் ஆண்டு  5,890 கோடியாக இருந்த டாஸ்மாக் சாராய விற்பனை, 2009-10-ம் ஆண்டு ஒரேயடியாக  14,000 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
 டாஸ்மாக் விற்பனைக்கு இணையாக, 2005-ம் ஆண்டு 9,215 சாலை விபத்துச்சாவுகள் என்ற நிலையிலிருந்து, 2009-ம் ஆண்டு 13,746 சாலை விபத்துச்சாவுகளாக உயர்ந்திருக்கிறது. வேறுவிதத்தில் சொல்வதானால், 2004-05-ல் தினசரி  16 கோடியாக இருந்த டாஸ்மாக் விற்பனை, 2009-10-ல் தினசரி  38 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில்,  2005-ம் ஆண்டு, தினசரி 26 உயிர்கள் தமிழகச் சாலைகளில் பலியிடப்பட்டன. 2009-ம் ஆண்டோ, அவை வேகமாக அதிகரித்து, தினசரி 38 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், தமிழகச் சாலைகள் இப்பொழுது நரபலி பீடங்களாக ஆகிவிட்டன.
 கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சம் இருக்கும். இன்றைய அரசின் ஐந்தாண்டு காலத்தில் மட்டும் தமிழகச் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,000 ஆக, உலக அளவில் புதிய கின்னஸ் சாதனை புரிந்திருக்கும். ஆமாம், சாராய விற்பனை லாபத்திலும்தான்.
 போலியோ மற்றும் இதர நோய்களால், உடல் ஊனமுற்றவர்களைவிட, விபத்துகளில் தங்கள் கை, கால்களை, கண்களை, முதுகுதண்டுகளை இழப்பவர்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்காக நலவாரியம் அமைத்துள்ள நிலையில், இப்படி விபத்துகளில் அவயவங்களை இழந்து முடங்குபவர்கள், தமிழக அரசின் பார்வையில், ஊனமுற்றவர்களா, மாற்றுத்திறனாளிகளா முதல்வர்தான் விளக்க வேண்டும்.
முதல்வர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும், சாலைப்பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் போன்றோர் இடம்பெறாமல், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மட்டுமே இவை கொண்டுள்ளன. தெளிவான நடவடிக்கைகள், பரிந்துரைகள், திட்டங்கள் இல்லாமல் இக்கவுன்சில் வெறும் காகிதப் புலியாக உள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்று, ஆண்டுக்கு ஒருமுறை சாலைப்பாதுகாப்பு வார விழாச் சடங்கு கொண்டாடுவது மட்டும்தான் ஒற்றை அம்சக்கொள்கையாக உள்ளது.
 2006-ம் ஆண்டு, 11,009 சாலை விபத்துச்சாவுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றைப் படிப்படியாக 20 சதவீதம் குறைத்து 2013-ம் ஆண்டுக்குள் 8,800 சாவுகள் என்று குறைக்கப் போவதாக  உள்துறை உறுதிமொழி எடுத்தது. ஆனால், இந்தச் சாவு எண்ணிக்கை கடந்த ஆண்டு 13,840-ஆக உயர்ந்துள்ளபோதிலும், வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது.
 அதேசமயத்தில், தமிழகத்தில் ஏற்கெனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்தநிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, சுறுசுறுப்பைக் காட்டியுள்ளது. இனி மொத்தம் 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண் மக்களின் வாய்களில் மதுவைத் திணிக்கும். அதனால், 2013-ம் ஆண்டு, குறைய வேண்டும் என்று உள்துறை வைத்துள்ள இலக்குக்கு மாறாக, சாலை விபத்துச்சாவுகள் அதிகரிப்பதோடு, அவற்றுக்கு மிகப்பெரிய காரணியான சாராய விற்பனையும் புதிய வரலாறு படைக்கும் என்றால் மிகையில்லாத கூற்று.
 96 சதவீத சாலை விபத்துகளுக்கு, ஓட்டுநர்களின் தவறுகளே காரணம் என்று தமிழகப்  போக்குவரத்துத்துறை கூறுகிறது. வேகமாக ஓட்டுவதும், குடித்துவிட்டு ஓட்டுவதும்தான் சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணம் என்று உள்துறையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளது.
 தமிழகத்தில் ஓராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு, பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால், 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம் என்று பல புள்ளிவிவரங்கள் மூலம் யூகிக்க முடிகிறது. காவல்துறைத் தலைவர்களும் இதையே உறுதி செய்துள்ளனர்.
 இன்று, தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலைதான் உச்சகட்ட அவலமாக மாறியுள்ளது. இன்றைய 15,000 கோடி சாராய விற்பனையை, இனி ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டுமானால், மேலும் மேலும் அதிக விற்பனை இலக்கு வைக்க வேண்டும்.
இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால், யாரும், எந்த வயதினரும், எந்த நேரமும், எங்கும், எவ்வளவு வேண்டுமானாலும், குடித்துவிட்டு ஓட்டலாம், விபத்து ஏற்பட்டு சாகலாம் அல்லது யாரையாவது சாகடிக்கலாம், அரசும், காவல்துறையும் கண்டுகொள்ளாது. உள்துறையின் வலது கையான டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு வைத்து விற்பனை செய்து, குடித்துவிட்டு ஓட்ட உற்சாகப்படுத்தும்போது, உள்துறையின் இடது கையான காவல்துறை, என்ன செய்து விட முடியும்?
 குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுப்பதற்கு, காவல்துறை எடுக்கும் முயற்சிகள் மிக மிக மோசம் என்றும், அப்படி ஏதாவது முயற்சி எடுத்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்தாலும், போக்குவரத்துத்துறை கண்டுகொள்வதில்லை என்றும்  முன்னாள் காவல்துறைக் கூடுதல் தலைவர் டாக்டர் ஷியாம் சுந்தர் தெளிவாக எழுதியுள்ளார். அதனையே, அரசின் சிறப்புச் செயலரும் துறை சார்ந்த சுற்றறிக்கைகளில் வழிமொழிந்துள்ளார்.
 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சாராயம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசாணையே உள்ளது. ஆனால், நடைமுறையில் 18 வயது இளைஞர்களும், விடலைகளும்கூட, குறுக்கும் நெடுக்குமாக டூ வீலர்களை நிறுத்திவிட்டு, டாஸ்மாக் பார்களில் ஆற அமரக் குடித்துவிட்டு, மீண்டும் ஓட்டிச் செல்வதுதான் தினசரி அலங்கோலக் காட்சியாக உள்ளது. தண்ணீர் மற்றும் மணல் லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ, டாக்ஸி, வேன் டிரைவர்கள், ஏன் அரசுப் பேருந்து ஓட்டுநர்களில் கூட, பலர் குடித்துவிட்டோ, குடித்த பாதிப்புடனோ, தினமும் வண்டிகளை இயக்குவதுதான் நிதர்சனம்.
விபத்துகளில் அடிபட்டு மயக்க நிலையில் வருபவர்கள் குடித்திருந்தால், அவர்களுக்கு அவசர சிகிச்சைகூட அளிக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர் மருத்துவர்கள். தமிழக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குக் கொண்டு வரப்படும் விபத்தில் சிக்குண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும், உதவியாளர்களும் மன அழுத்தத்துக்கு ஆள்பட்டு வருகிறார்கள். அதனால், அவர்களுக்கே மனநோய் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.
 குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர். டாஸ்மாக் பார்கள் மட்டுமல்ல, ஐந்து நட்சத்திர விடுதிகள், "பப்', கடற்கரைச்சாலை உல்லாச ரெசார்ட்கள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றிலுமே இந்தச் சட்டவிரோதச்  செயல்பாடுகள்தான் வாடிக்கை. இந்த நிலையில், தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

Dinamani (10-08-2010): கட்டுரைகள் - முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! - அ.நாராயணன்

முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! 


By அ. நாராயணன் 
10 Aug 2010 12:00:00 AM IST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னைக்கு வெளியே உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வளாகங்களில் உள்ள வீடுகளின் பரப்பளவு மிகக்குறைவு என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அங்குள்ள மக்கும் குப்பைகளின் (ஆம், ஏழைகள்தான்) பிரச்னைகளை அரசியல்படுத்தியமைக்கு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
 ஏனென்றால், அவரது ஆட்சியில் தான், குடிசை மாற்று வாரியம், 10-வது மற்றும் 11-வது நிதிக் கமிஷனிடம் இருந்து நிதி பெற்று, சென்னைக்கு வெளியே ஏழைகள் வசிப்பதற்காக 115 சதுர அடியில் உலகிலேயே மிகச்சிறிய, மட்டமான வீடுகளைக் கட்டத் தொடங்கியது. அவர் தொடங்கிய மோசமான திட்டத்தை விரிவுபடுத்தி, சென்னையின் பல குடிசைப்பகுதிகளைக் காலிசெய்து, அந்த மக்களை சென்னைக்கு வெளியே குடியேற்ற அவசரப்படுகிறது இன்றைய அரசு.
 பறக்கும் ரயில் திட்டம், கூவம் சீரமைப்பு, உயர்நிலை மேம்பாலங்கள், பூங்காக்கள் அடங்கிய இன்றைய ஆட்சியாளர்கள் கனவு காணும் சிங்காரச் சென்னையின் கொண்டையில் உள்ள ஈரும், பேனும்தான் நகர்ப்புறச் சேரிகள். சந்தைப் பொருளாதாரத்தின் இரக்கமற்ற பேராசைக்கு ஈடுகொடுக்கும் நுகர்வுத்தன்மையும், சக்தியும் பெற்ற மேல்தட்டு, நடுத்தர மக்கள் மட்டுமே சென்னைக்குள் வாழத் தகுந்தவர்கள் எனும் எழுதப்படாத கொள்கையை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பெரு நிறுவனங்களும் இணைந்து, வர்க்கப்போர் போன்று தொடங்கி விட்டதைப் பார்க்கிறோம்.
 வளர்ச்சித் திட்டங்களில் புரளும் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவழிப்பதற்குத்  தடையாக இருப்பவை இந்த குடிசைப் பகுதிகள் என்றே கருதப்படுகிறது. குடிசைகளையெல்லாம் ஆக்கிரமிப்புகள் என்றும், அதனால் அவர்களைக் காலி செய்ய வைப்பது சரி என்றும் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்துள்ள வளாகங்களை, அதிகார வர்க்கத்துடன் ஒன்றாகக் கலந்தவர்களை நெருங்கி விடாது. ஏனென்றால், இவர்கள்தான் இந்த வளர்ச்சியின் பங்குதாரர்கள்.
 நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மலிவான பட்ஜெட்டில் அதிகமான ஏழைக் குடும்பங்களை குடியமர்த்திய முன்மாதிரித் திட்டம் என்று கண்ணகி நகர் வளாகத்துக்காக இந்திய அளவில் பரிசுகூட வாங்கியிருக்கிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். ஆனால், இந்த வளாகங்களும், அங்குள்ள பராமரிப்பற்ற சூழலும், மனித உயிர்கள் வாழத்தகுதி இல்லாதவை என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
 தமிழ், தமிழர்கள், திராவிடம், சினிமா என்று கச்சேரி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். மக்களின் உண்மையான பிரச்னைகளை ஆட்சியில் உள்ளவர்களிடம் விவாதிக்காமல், ஆமாம் போடுவதையே கடமையாகக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருப்பது இன்றைய துரதிருஷ்ட நிலை. இரண்டு நாள்கள் இந்த வளாகங்களில் தங்கினால் மட்டுமே, தாங்கள் உருவாக்கியவை பூலோக நரகங்கள் என்பதை இவர்கள் உணர முடியும்.
 இதுவரை, இவ்விரு வளாகங்களிலும் 155 முதல் 165 சதுர அடி கொண்ட (குளியலறை, கழிப்பிடம் சேர்த்து)  22,400 கான்கிரீட் பொந்துகளைக் கட்டி, 1,04,000 நகர்ப்புற ஏழைகளை மறுகுடியமர்வு செய்துள்ளது அரசு. மேலும், 8,048 பொந்துகளைக் கட்டுவதை எதிர்த்த பொதுநல வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 செம்மஞ்சேரிக்கு அருகில் பெரும்பாக்கத்தில் | 950 கோடி செலவில் ஏழு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது அரசு. வரும் காலத்தில், சென்னையில் உள்ள 36,500 குடும்பங்கள், கிட்டத்தட்ட 2 லட்சம் குடிசைவாசிகள் சென்னைக்கு வெளியே புதிய அகதிகள் முகாம்களுக்குத் துரத்தப்படும் அபாயமும் உள்ளது.
 கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தாத அரசின் குற்றத்தால், கிராமங்களின் ஏழை மக்கள் பிழைக்க வழி தேடி சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். மேலும் பலர், சென்னையிலேயே பல தலைமுறைகளாகப் பிறந்து வளர்ந்தவர்கள். சென்னையின் சேரிகளில், இவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தாலும், இவர்களது குழந்தைகள் பொது சமூகத்துடன் பழக வாய்ப்பிருந்தது. பள்ளிக்கல்வி, மருத்துவம் போன்றவை அருகில் கிடைத்தன. அவர்களின் ஒரே குற்றம் விளிம்பு மக்களாக இருப்பதுதான்.
 ஆனால், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் இருக்கும் சூழலைப் பொறுத்தவரை விசித்திரமும் இல்லை, வேடிக்கையும் இல்லை. அது உச்சகட்ட அவல வாழ்க்கை. ஒற்றைச் ஜன்னலும், ஒரே ஒரு தகரக்கதவும் கொண்ட வீடுகள், பாதாளச் சாக்கடைக் குழாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள், குடிநீர் பைப்புகள் என்று ஒவ்வொன்றும் நாலாம் தரம். ஊழல், கஞ்சத்தனம், அலட்சியம், பொறுப்பற்ற ஆளுமை, கேவலமான நிர்வாகம் எல்லாம் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. மழைக்கு ஒதுங்குவதற்கும், தட்டுமுட்டுச்  சாமான்களை வைப்பதற்கும் தவிர, தங்களது வாழ்வை மக்கள் இங்கே திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள்.
 நிரந்தரக் குடிநீர் வசதி இல்லை. கிடைப்பதும் மிகக் குறைவு. கிடைத்தாலும் ஒரே நாளில் புழுத்து நெளிகிறது. பல வீடுகளில் குடிநீருக்காக அலைவதற்கும், அடிபம்புகளை அடித்து ஓய்வதற்கும் ஒத்தாசையாக சிறார்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். வீடுகளின் கழிப்பிடங்கள் மன அழுத்தத்தை வரவழைக்கும் விதத்தில் உள்ளதோடு, நீரும் பற்றாக்குறை. அதனால், பலர் திறந்தவெளிக் கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர்.
 22 ரேஷன் கடைகளாவது அவசியமான மக்கள்தொகைக்கு, ஒதுக்கப்பட்டவையோ வெறும் 7 ரேஷன்கடைகள்தான். அதனால், ரேஷன் வாங்குவது பெரிய போராட்டம். ஜங்ஷன் பாக்ஸ்கள் இருந்தாலும், பெரும்பாலான வீடுகளுக்கு மின்வசதி செய்து தரப்படவில்லை. அரசியல் கட்சி குண்டர்களும், மின்சாரத்துறை ஊழியர்களும் இணைந்து வீடுகளுக்கு ஆபத்தான திருட்டு கொக்கி மின் இணைப்புக் கொடுத்து, மாதாமாதம் பல லட்சங்கள்  ஈட்டுகிறார்கள்.
 குழந்தைகளுக்கான அங்கன்வாடிகள் மிகமிகக் குறைவு. போனால் போகிறது என்று இயங்கும் இவற்றின் பராமரிப்பும் மிக மோசம்.  பெரும்பாலானவை அரசுசாரா நிறுவனங்களால் நடத்தப்படுபவை. குடிநீரும், கழிப்பிடங்களும் இல்லாமல் இவை உண்மையில் தொற்று நோய் மையங்கள்.
 இவ்வளாகங்களில் உள்ள 6 சிறிய பள்ளிகளை, பள்ளிகள் என்ற பெயரில் அரசின் மிகப் பெரிய மோசடி என்று தான் கூற முடியும். மறுகுடியமர்வின் காரணமாக மட்டுமே, 10,000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கல்வி இல்லாமல் எதிர்காலத்தைத் தொலைத்து வருகிறார்கள்.
 ஆரம்ப சுகாதார மையங்களோ, மருத்துவமனையோகூட அரசு அமைக்காத நிலையில், மக்கள் நிவாரணம் இன்றி ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். பிரசவங்கள், வீட்டு வாசல்களிலும், ஆட்டோவிலும் நடந்துள்ளன.
 சென்னைக்குத் தினமும் வந்து வேலை செய்து மீண்டும் வளாகங்களுக்குத் திரும்புவதும் மிகப்பெரிய போராட்டம். ஆகப்பெரும்பாலோர் வேலையை இழந்து, கல்வியை இழந்து, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி, ரேஷன் என்று போராடி, பண விரயம் செய்து, வாழும் வழி தெரியாமல், மன அழுத்தத்தோடும், நோய் நொடிகளோடும் உழல்கிறார்கள். அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் இம்மக்களை அமைதியைக் கெடுக்க வந்தவர்களாகவும் குற்றப் பரம்பரை போன்றும் தவறாகப் பார்ப்பதுதான் நிதர்சனம். இங்குள்ள இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை கொடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வருவது இல்லை.
  மிக ஆரோக்கியமற்ற சூழலால், இங்கு தற்கொலைச் சாவுகள் மிக அதிகம். தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானோர் இளம் பெண்கள். செத்தவர்களுக்கும்கூட அமைதியில்லை. புதைப்பதற்கு இருப்பதோ அரைகுறையாக உள்ள பராமரிப்பற்ற மிகச் சிறிய சுடுகாடு. புதைத்த இடத்திலேயே மீண்டும் தோண்டி, புதிய சடலங்களைப் புதைக்கும் அவலம்.
 எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது குடிசை மாற்று வாரியம். ஆனால், மார்ச் மாதம் தலைமைச் செயலகக் கூட்டத்தில், பல துறைச்செயலர்களும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் இந்த வளாகங்களின் இழிநிலையையும், ஏழைகளின் வாழ்வாதார இழப்பையும் பற்றி குற்றஉணர்வுடன் பேசியுள்ளனரே, ஏன்?
 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை.
 கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன?
 வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.
 உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினராக இந்த வளாகங்களுக்கு மூன்று நாள்கள் சென்று ஒவ்வொரு விஷயத்தையும் பேசி, பார்த்து, விசாரித்து, அனுபவித்து வந்த பின்னர், சில நாள்களுக்கு தூக்கமும் வர மறுத்தது, தொண்டைக்குழிக்குள் சோறும் இறங்க மறுத்தது என்பதுதான் உண்மை.
 நகர வளர்ச்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு, எல்லா சமூகங்களோடும் இணக்கமாக வாழும் உரிமை இழந்து நலிந்து போவோரில் ஆகப் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர். ஆனால், தலித் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவை இவ் விஷயத்தில் மயான அமைதி காத்து வருகின்றன. நவீன தீண்டாமையை உருவாக்கும் இதே அரசு, ஏழ்மை ஒழிப்புக்காகப் பல திட்டங்களை முழுப்பக்க விளம்பரங்களாக வெளியிடுவதுதான் விசித்திரமான வேடிக்கை.

Dinamani (14-10-2010): கட்டுரைகள் - பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! - அ.நாராயணன்

பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! 
 

By அ. நாராயணன் 
14 Oct 2010 

சென்னை மாநகராட்சி முழுவதும் 20 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரம் சென்னை மேயர் அறிவித்திருப்பது வரவேற்புக்கு உரியது. ஆயினும், திடீரென்று வந்துள்ள இந்த அறிவிப்பை, ""மிகத் தாமதமாக வந்துள்ள மிகக் குறைந்தபட்ச நடவடிக்கை'' என்றும் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.
 1999-ம் ஆண்டே, சென்னை மாநகராட்சி 20 மைக்ரான் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றி, அதனடிப்படையில் தமிழக அரசிடம் உள்ளாட்சி சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கக்கேட்டு விண்ணப்பித்தது. பின்னர், திடக்கழிவு மேலாண்மை மூலமே மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்து விடுவோம் என்று நேற்றுவரை கூறி வந்துள்ளது மாநகராட்சி. இவ்வாறு பதினோரு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இப்பொழுதுதான் இப்பிரச்னையின் தீவிரத்தைச் சிறிதாவது உணரத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
 ஆனால், 20 மைக்ரான் தடிமன் எனும் அளவுகோல் ஒன்றுக்கும் உதவாது என்பதை நாம் உணர வேண்டும். மிக எளிதாக 21 மைக்ரான் அல்லது 24 மைக்ரான் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் வியாபாரிகள் வண்ணமயமான, ஆனால் மிக ஆபத்தான மெல்லிய பைகளைத் தாராளமாகப் புழக்கத்தில்விட முடியும். மேலும், மிக மலிவான விலை என்பதால் 40 அல்லது 50 மைக்ரான்வரை கூட பிளாஸ்டிக் பைகளைப் பிரித்து காசாக்க முயல்வது, இன்றைக்கு சிறிதும் லாபமற்ற தொழில் என்றே கருதப்படுகிறது. அதனால்தான், யாரும் மிக மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களை ஆர்வமுடன் பிரித்துச் சேகரிக்க முன்வருவதில்லை.
 இக்காரணத்தின் அடிப்படையிலேயே, மேற்கு வங்கம், மும்பை, தில்லி, சண்டீகர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் 40 மற்றும் 50 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருள்களும் தடை செய்யப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
 தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 இக்கட்டுரை ஆசிரியர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.
 சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :-
 உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சுழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன.
 தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும்.
 முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன.
 ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும். மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
 சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
 - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009.
 சென்னை உள்பட, தமிழகத்தில் பல நகராட்சிகளில் வெள்ள நீர் கால்வாய்கள் அடைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும், கழிவுநீர் பாதாளச் சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கும், கொசுக்கள் பெருகி மர்மக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற பலநோய்கள் ஏற்படுவதற்கும், விசிறியடிக்கப்படும் பைகள், கப்புகள், ஸ்பன்கள் போன்றவைதான் முதன்மைக் காரணம்.
 அதுபோல, பெரிய ஹோட்டல்கள் முதல் தெருமுனை கையேந்தி பவன்கள் வரை உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேக்கேஜிங்குகளில் அல்லது பைகளில் பார்சல் செய்து தருகிறார்கள். உணவுப் பொருள்களின் சூடு மற்றும் எண்ணெய்ப்பதத்தால், பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான பல வேதிப் பொருள்கள், ரசாயன சாயங்கள் மற்றும் காரீயம், ஆர்சனிக், நிக்கல், மெர்க்குரி போன்ற உலோகங்கள் உணவுடன் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இவ்வாறு உண்பது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது. அதேபோல, மீந்துவிடும் உணவுடன் பிளாஸ்டிக் பைகளையும் கால்நடைகள் சேர்த்து விழுங்கிவிடுகின்றன.
 அதனால், நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமங்களிலும்கூட மேய்ச்சலுக்குப் போகும் கால்நடைகள் மற்றும் கன்றுக்குட்டிகள், நூற்றுக்கணக்கில் தமிழகத்தில் இறந்து வருவது நடைமுறையாகிவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் கால்நடைகளின் குடலில் தங்கிவிடுவதால், அவை கறக்கும் பாலில் உண்டாகும் நச்சுத்தன்மையை ஆராய தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் முற்பட்டு வருகிறது.
 இவ்வளவு ஆபத்துகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவை தடை செய்யப்பட்டால், கணிசமான வேலை இழப்புகள் ஏற்படும் எனும் வாதம் மிகத் தவறானது. மாறாக, தையல் இலை, வாழை இலை, தாமரை இலை மற்றும் மட்டை, பாக்கு மட்டை, துணிப்பை, காகிதப்பை, சணல்பை என்று பல விதங்களில் இயற்கைக்கு உகந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அதிக அளவில் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும். அதோடு, தமிழக விவசாயிகளுக்கும், இவ்வகை மூலப்பொருள்களை விளைவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
 150 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட வங்கதேசத்தில், இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டால், பொதுமக்களும் சரி, உணவு விடுதிகளும் சரி அவசியமான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.
 இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
 இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் கடமையாகும். சென்னையின் மேயரும் சரி, தமிழக அரசும் சரி தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுப்பார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Dinamani (20-9-2010): கட்டுரைகள் -தமிழக அரசின் "ஜிம் க்ரோ' சட்டங்கள் - அ.நாராயணன்

தமிழக அரசின் "ஜிம் க்ரோ' சட்டங்கள்

அ. நாராயணன்
Published : 20 Sep 2010


பத்தொன்பதாம் நூற்றாண்டு - அமெரிக்காவில், கருப்பர்களை அடிமைகளாக நடத்துவது நிறுத்தப்பட்ட பின்பும், தீண்டாமைக் கொடுமை மட்டும் தொடர்ந்தது. கருப்பு நீக்ரோக்கள் வெள்ளையர்களுக்கு சமம், ஆனால் தனித்தனியே என்ற "ஜிம் க்ரோ' சட்டங்கள் 1876 முதல் 1965 வரை, கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் அமலில் இருந்தன. தீண்டாமை இருந்த அமெரிக்காவில் "ஜிம் க்ரோ' சட்டங்களின் படி, கருப்பர்கள் வசிக்க தனி காலனிகள், தனி விடுதிகள், தனி பொதுக் கழிப்பிடங்கள், தனி பள்ளிகள், தனி வணிக வளாகங்கள், தனி கல்லூரிகள் என்று எல்லாமே தனித்தனி தான். ÷வெள்ளை, கருப்பு இரண்டு இனமும் சரி சமம் என்று சொல்லப்பட்டாலும், கருப்பர்களுக்கான எல்லா அமைப்புகளும் வசதிக்குறைவாக, நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கும். இதே போன்றதொரு நிறவெறிக் கொடுமை, காந்தி நெல்சன் மண்டேலா, 1994-ல் ஜனாதிபதியாகும் வரை தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்தது. ÷உலகெங்கும் தீண்டாமைக் கொடுமைகள் மங்கிவரும் நிலையிலும், மக்களாட்சி அமையப் பெற்று 63 ஆண்டுகளும், அரசியலமைப்புச் சட்டம் அமையப்பெற்று 60 ஆண்டுகளும் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் சாதியின் பெயரால், தீண்டாமை மங்காமல் சுடர்விட்டு எரிவதை என்னவென்று சொல்வது? இன்றும் ஒவ்வொரு கிராமங்களுக்கு வெளியிலும் சேரிகள். அந்தச் சேரி மக்கள் பயன்பாட்டுக்காக தனி சுடுகாடு. திடீர்திடீரென்று  முளைக்கும் தீண்டாமைச் சுவர்கள். ÷இந்நிலையில், தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக என்று தொடங்கப்பட்டு, அரசின் ஆளுமையில் இருக்கும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளும், விடுதிகளும், தலித் குழந்தைகளின், இளைஞர்களின் முன்னேற்றத்துக்குப் படிக்கற்களாக இருப்பதற்கு பதில் மிகப்பெரிய தடைக்கற்களாக நடைமுறையில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆக, கல்வியில் முன்னேற்றம் அடைந்து, சமூகப் பொருளாதார விடுதலை கிடைப்பதற்குப் பதில், இந்தத் தலித்துகளுக்காக தனியாக உள்ள கல்வி நிறுவனங்கள் இக்காலகட்டத்திலும் தரமற்ற முறையில் தொடர்வது என்பது, அரசுகளே நடைமுறைப்படுத்தும் எழுதப்படாத "ஜிம் க்ரோ' சட்டங்கள் என்று கூறுவதுதானே சரியாக இருக்கும். ÷கிராமங்களில் உள்ள தீண்டாமையையும், வாழ்வாதார இழப்பையும் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்துக்கு வந்து, பொது சமுதாய நீரோட்டத்துடன் கலந்து வாழ்ந்து முன்னேறத் துடிக்கும் தலித்துகளுக்கு இப்பொழுது, அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் பேரவலமாக அமைந்து விட்டது. ÷நகர்ப்புறச் சேரிகளில் உள்ளவர்களுள் 92 சதவீதத்துக்கும் அதிகமானோர் தலித்துகள் என்பதை குடிசை மாற்று வாரியம் எடுத்த கணக்கெடுப்பே உறுதி செய்கிறது. இதில் கணிசமான குடும்பங்கள், ஓரிரு தலைமுறைகளுக்கும் மேலாக, சென்னையில் வசித்து வருபவர்கள். ÷கிராமங்களில் வேறூன்றியுள்ள சாதிப்பிளவு போதாதென்று, நகர்ப்புற விளிம்பு மக்களை, பொருளாதார அடிப்படையில் அரசுகளும், பெரிய நிறுவனங்களும் கூட்டுச்சதி செய்து பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, ஒரு நவீன தீண்டாமையை ஆழமாக ஊன்ற முனைப்புடன் செயல்படுவதை என்னவென்று புரிந்து கொள்வது.÷ ÷தில்லியில் உள்ள வளரும் சமுதாயங்கள் பற்றிய ஆராய்ச்சி மையத்தின் சமூக அறிவியலாளர் அஷிஷ் நந்தி சமீபத்தில் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இன்றைய, சேரிகள் இல்லா இந்திய நகரங்களை உருவாக்கும் திட்டம் என்பது வெறுமனே சேரிகளை பொதுக்கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கும் திட்டம் தான். இது ஒன்றும் புதிய திட்டமல்ல, அன்றைக்கு சஞ்சய் காந்தி தில்லியில் முயற்சி செய்தார், பின்னர் ஜக்மோகன் முயற்சி செய்தார், அவர்களைக் குறைகூற முடியாத வகையில் இன்றைக்கு எல்லா அரசுகளும் கடைபிடிக்கின்றனர் என்கிறார் அவர். ÷சேரிகளை, கண்களுக்குத் தெரியாமல் செய்வதற்கான உந்துதல், மனசாட்சி இல்லாதவர்களிடமும், பெரும் செல்வாக்குப் பெற்றவர்களிடமும், முட்டாள்தனமானவர்களிடமும் மட்டும் இல்லை; யோசிக்கத் தெரியாத ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது என்கிறார் அஷிஷ் நந்தி. ÷சேரி மக்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பணிகளை மட்டும் உறிஞ்சிக் கொண்டு, அவர்களைத் தங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்யும் இக்குணம், இப்பொழுது ஒரு நோயாக - ஒரு பெரும் கொள்ளை நோயாக உருவெடுத்து வருகிறது என்று வருத்தத்துடன் அக் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் அவர். ÷தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளும், திட்டங்களும், நகர்ப்புற ஏழை மக்களிடம் வெளிக்காட்டும் கரிசனமும் சிறுவர்கதைகளில் வரும் குள்ளநரிகளின் தந்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. ÷சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளில் மறுகுடியமர்வு என்ற பெயரில் நடக்கும் மானுட அவலத்தைப் பற்றி ஏற்கெனவே "தினமணி' கட்டுரை மூலம் பதிவு செய்தாகி விட்டது. இப்பொழுது, செம்மஞ்சேரியைத் தாண்டி, தமிழக அரசு கட்ட முற்பட்டு வரும் பெரும்பாக்கம் மெகா மறுகுடியமர்வுத் திட்டம், எதிர்காலத்தில் அங்கு அனுப்பப்பட்டு, நிச்சயமாக வாழ்க்கை சூன்யமாகி விடக்கூடிய குழந்தைகளையும், பெண்களையும் நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது. ÷சில நாள்களுக்கு முன், சென்னையின் சேரிப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குடும்பங்களுக்கு, குடிசை அகற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன் செய்த அறிவுரையையும், அந்த அறிவுரைக்குள் நயவஞ்சகமாகப் பொதிந்திருக்கும் நவீன தீண்டாமையையும், சிந்திக்கும் திறனுடன் மனசாட்சியும் கொண்டவர்களால் சிறிதும் ஜீரணிக்க முடியாது. ÷பெரும்பாக்கத்தில் மட்டும் 23,320 குடியிருப்புகளைக் கட்டி, கிட்டத்தட்ட ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைவாசிகளை சென்னையிலிருந்து காலி செய்யவைத்து, அவர்கள் எல்லோரையும் வெறும் 125 ஏக்கர் பரப்பளவுக்குள் ஒரு முகாம் ஏற்படுத்தி முடக்கிவிட முன்வந்துள்ளது தமிழக அரசு. சென்னையைச் சுற்றி பெரிய நிறுவனங்கள் ஏக்கர் ஒன்றுக்குப் பல கோடிகள் கொடுக்கத் தயாராக உள்ள நிலையில், 23,320 ஏழைக் குடும்பங்களுக்கு 125 ஏக்கர் என்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பது அரசின் நினைப்பு. ÷இந்த பிரம்மாண்டமான குடியிருப்புக்குள், நவீன வணிக வளாகங்கள், ஏழு அடுக்கு குடியிருப்புகள், குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் லிஃப்ட் வசதி, பள்ளிகள், ஏன் ஒரு கல்லூரி கூடத் திறக்கப்படும் என்றும் குடிசை அகற்று வாரிய அமைச்சர் தூண்டில் போடுகிறார். ÷ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள மற்ற வளாகங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் அவலட்சணம். இன்று வரை அவற்றைச் சீர் செய்ய முடியவில்லை; முடியவும் முடியாது. இப்பொழுது பெரும்பாக்கத்தில் கட்டப்படும் ஏழு மாடி குடியிருப்புகள் எப்படி இருக்கும், அங்கு அரசு நிறுவும் லிஃப்ட் வசதி எப்படி இருக்கும் என்பதை எளிமையாக யூகிக்க முடியும். மக்களின் பங்களிப்பு, கலந்தாலோசனை இல்லாமல் கட்டப்படும் வளாகங்களில், குடிசை மாற்று வாரியத்தால் மட்டும் லிஃப்டுகளையும் மற்ற வசதிகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? ÷பொருத்தப்பட்ட சில நாள்களுக்குள்ளோ, வாரங்களுக்குள்ளோ இந்த லிஃப்டுகள் பழுதடைவதோடு, அதன் உதிரி பாகங்களும் சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு விடும். அது போன்றே, இவ்வளாகங்களில் மின்தடையே வராது என்றும், தரமான ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு வேலை செய்யும் என்றும் அரசு உத்தரவாதம் தந்தால், வடிகட்டிய ஏமாளிகள் மட்டுமே நம்பமுடியும். ÷விளிம்பு நிலை மக்களுக்கான வளாகங்களில் குடிநீரும், தரமான கழிப்பிடச்சேவையும் ஏழு மாடிகள் வரை ஏறி வராது என்பது திண்ணம். நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்குமாடிகளிலேயே மின்சாரம் தடைப்பட்டாலோ, லிஃப்டுகள் பழுதடைந்தாலோ, அந்த மக்கள் திணறிப்போய் விடுவார்கள். ÷பொதுக்கழிப்பிடத்துக்குச் செல்வது, பிளாஸ்டிக் குடங்களில் குடிநீர் பிடிப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, வேலைக்குச் சென்று வருவது என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏழு மாடி ஏறி இறங்க இப் பெண்களால் முடியுமா? கருவுற்ற பெண்கள் 7 மாடிகள் ஏறி இறங்கி, படிகளிலேயே குழந்தை பிறப்போ, கருச்சிதைவோ ஏற்பட்டால்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்படி, தண்ணீருக்கும், ஒவ்வொரு அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஏறி இறங்கி, ரத்த சோகை கொண்ட விளிம்புநிலைப் பெண்களின் மூட்டுகள் தேய்ந்து, நரம்புகள் புடைத்துப் போய்விடும். முழு மூட்டு மாற்றுச்சிகிச்சை போன்ற அதிக செலவாகும் நவீன அறுவைச் சிகிச்சைகளுக்கு, கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இடமில்லையே. ÷இந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் மக்களில் எத்தனை பேர் முதியவர்களாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் இருக்கப் போகிறார்களோ? அவர்கள் ஆறேழு மாடி ஏறி இறங்க முடியாமல், அரசு ஒதுக்கும் சிறு கான்கிரீட் அறைகளுக்குள்ளேயே வாழ்க்கையை முடக்கிக்கொள்ள வேண்டியது தான். ஆக, விளிம்பு நிலை மக்களுக்கு ஏழுமாடிக் குடியிருப்புகள் என்று யோசித்துள்ள அரசுத் துறைகளில் உள்ளவர்கள் இதயம் இல்லாதவர்கள் என்பது மட்டுமல்லாது, சிந்திக்கவும் மறுக்கும் அபூர்வப்பிறவிகளாகவே இருக்க முடியும். ÷பெரும்பாக்கம் வளாகத்தில் கொண்டு விடப்படும் ஏழை மக்களுக்காக அங்கு கல்லூரியும் அமைக்கப்படும் எனும் அமைச்சரின் அறிவிப்பின் மூலம், மறைமுகமாக ஒரு செய்தி வெளிப்படுகிறது.  பெரும்பாக்கம் முகாம்களுக்கு செல்லவிருக்கும் நாற்பதாயிரம் விளிம்புநிலை  குழந்தைகளே, நீங்கள் முகாமுக்குள்ளேயே உள்ள பால்வாடிகளில் உருண்டு புரண்டு, முகாமுக்குள்ளேயே உள்ள பள்ளிகளில் முடிந்தால் படித்து, முகாமுக்குள்ளேயே அமைய இருக்கும் கல்லூரியில் நுழைந்து கொள்ளுங்கள், கல்விக்காகக்கூட பொதுவெளிக்கு நீங்கள் வரத்தேவையில்லை என்பதாகும் இச்செய்தி. ÷பெரும்பாக்கம் மறுகுடியமர்வுத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய நவீன வளாகம்தான் கட்டித் தருகிறோம் என்று அரசுத் தரப்பில் வாதம் வைக்கப்படும். அந்த வாதத்தை ஏற்று, அரசு கூறுவது சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவும் வாய்ப்பு அதிகம். அது, தீண்டாமை இருந்த அமெரிக்காவின் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த "ஜிம் க்ரோ' சட்டத்தை நினைவுபடுத்தும். ஆனால், நீதியைத்தாண்டி, நியாயம் என்று ஒன்று உண்டு என்பார் அரசியல் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.  அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது - விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத்  துரோகம். இந்த துரோகத்தை முறியடிப்பதுடன், நிலையான மற்றும்  நியாயமான மாற்றுத்திட்டங்களைப் பற்றி அரசை யோசிக்க வைப்பது, கட்சிகளின், மக்கள் இயக்கங்களின், மனசாட்சி உள்ளவர்களின் உடனடிக் கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Dinamani (29-12-2010): கட்டுரைகள் - ராகுல் காந்தியும் தமிழக அறிவு ஜீவிகளும் - அ.நாராயணன்

ராகுல் காந்தியும் தமிழக அறிவு ஜீவிகளும்

அ.நாராயணன்
Published : 28 Dec 2010


இளைஞர் காங்கிரஸôரிடமிருந்து ஓர் அலைபேசி கோரிக்கை வந்தது. தமிழகத்துக்கு இரண்டு நாள் சூறாவளிப்பயணமாக வரும் ராகுல் காந்தி, தமிழக அறிவுஜீவிகளுடன் கலந்துரையாட விரும்புகிறார்; இக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைக்குப்பின் உடனடியாக ஒரு ஒளிவட்டம் ஏற்பட்டது போலத் தோன்றியது. மார்கழி குளிரையும் மீறி உடலில் சுகமான வெப்பம். அண்ணா சாலையில் உள்ள கன்னிமாரா ஐந்து நட்சத்திர விடுதியில், அறிவுஜீவிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத கூட்டமாயிருந்தாலும், கணிசமாக மூத்த பத்திரிகையாளர்கள், பல்வேறு சமூக  ஆர்வலர்கள், ஓவியர்கள், காந்தியவாதிகள் என்று சுமார் எழுபது எண்பது பேர் வந்தனர். ராகுல் 55 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், இரண்டு மணி நேர நிகழ்வு, ஒரு மணிநேரக் கலந்துரையாடலாகச் சுருங்கியது. ஒரு மணிநேரமும் நின்றபடியே  எளிமையுடனும், மிகுந்த மரியாதையுடனும் ராகுல் நடந்து கொண்டார். கலந்துரையாடல் நடக்கும் அறையில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், முன் வரிசைகளில் கிட்டத்தட்ட 30 திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர், நடிகைகள். இவர்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி ராகுலுடன் அளவளாவ வந்திருப்பார்களோ என்ற நினைப்பு சற்று மகிழ்ச்சியளித்தது.அறிமுகவுரை முடிந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே, இந்தியாவில் விஸ்வரூபமாகி விட்ட சாராய சுனாமி பற்றி விவாதிக்கப்பட்டது. காங்கிரஸில் லட்சக்கணக்கான இளைஞர்களைச்   சேர்ப்பதில் அதிக ஆர்வம் எடுத்துக்கொண்டுவரும் வேளையில், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் சாராயத்தில் கரைந்துவிடும் ஆபத்து உள்ளது. 1947-ல் உள்ள நிலை வேறு, 21-ம்  நூற்றாண்டில், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் வேறு. மலேரியா, காசநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு என்று காலங்காலமாக உள்ள ஆரோக்கியப் பிரச்னைகள் சிறிதும் குறையாத நிலையில் வாழ்க்கைமுறை நோய்கள் பெரிய அளவில் இந்திய இளைஞர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வரைமுறையில்லாமல் அதிகரித்து வரும் மதுநுகர்வு மிகமுக்கிய பங்காற்றுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மிகப்பெரிய  பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.யாருடைய தீவிரவாதம் மிக அபாயகரமானது என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நீங்கள், மது வியாபாரிகள் தான் இன்றைக்கு இந்திய மக்களுக்கு எதிரான உண்மையான  தீவிரவாதிகள். இவர்களது பிடி, சட்டமன்றங்கள் முதல் நாடாளுமன்றம் வரை இறுகியுள்ளது, இந்தச் சாராய தீவிரவாதத்தை வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன், மாநில அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மாநில அரசே நேரடியாக இலக்குவைத்து சாராய வியாபாரம் செய்வதை ஆதரிக்கிறீர்களா என்று ராகுல் காந்தியிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ""ஆதரிக்கவில்லை'' என்று தெளிவாகவே பதில் கூறினார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து கொள்ளும்போது, அது சாராய வியாபாரிகளுக்கு நல்ல வேட்டைக்களமாக அமைகிறது. ஆனால், மக்களுக்கோ, நோயும், உடல் முடக்கமும், சாவும்தான் பிரதிபலனாகக் கிடைக்கிறது. இன்றைக்கு மதுநுகர்வை ஒழுக்க ரீதியாகப் பார்க்காமல், மிகப்பெரிய  சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். அதனால், எய்ட்ஸ், புகையிலை போன்றவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்திருப்பது போன்று, மத்திய, மாநில சுகாதாரத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த மதுக்கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டுவந்து, மதுவுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் தொடுக்க வேண்டும் என்று விளக்கியபோது, சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் ராகுல். மதுவை ஒரு சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்பதை ஆமோதித்த ராகுல், அதே வேளையில் தனிமனிதரைக் குடிக்காதே என்று அறிவுரை கூற முடியாது, இது அவரவர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இது எனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக்கொண்டாலும், குழந்தைத் திருமணத்தை மாவட்ட ஆட்சியரே முன்னின்று தடுத்து நிறுத்துகிறாரே, அப்படியிருக்க, தமிழகமெங்கும் பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும்  டாஸ்மாக் கடைகளில், 13 வயது மாணவர்கள்கூட சரக்கு அடிக்கும் நிலையில், இதை  அவரவர் விருப்பம் என்று விட்டுவிடலாமா என்று ராகுவிடம் விவாதிக்க நேரம் இடம் கொடுக்கவில்லை. 1993-ம் ஆண்டிலேயே  மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்திருந்தாலும், நடைமுறையில் பல்பிடுங்கிய பாம்பாகவே கடந்த 17 ஆண்டுகளாக இச்சட்டம் காட்சியளிக்கிறது. பாதாளச் சாக்கடை வேலை போன்ற அவலங்கள் அதிகரித்துள்ள நிலையில், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஏற்ற, நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய சட்டம் ஒன்றை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர ராகுல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, மத்திய அரசு நிதி ஒதுக்கி, மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படும்  ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்பது இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உதவும் வகையில் அமல்படுத்தப்படாமல், சேரி மக்களின் தலைக்கு மேலே தொங்கும் கூரிய கத்தியாகிவிட்டது. காண்ட்ராக்டர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய ஆதாயமாகவும், நகர்ப்புற ஏழைகள், நகருக்கு வெளியே  உள்நாட்டு அகதிகளாய் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்தொழியும் திட்டமாகவும் மாறிவிட்டது. ஒரு பக்கம் கல்வி அடிப்படை உரிமை என்று பேசிக்கொண்டு, மறுபுறம் ஏழை தலித் குழந்தைகளுக்குக் கல்வி அறவே மறுக்கப்படும் நிலையை, இந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கி வருகின்றன. ஆதலால், மத்திய அரசு, மாநில அரசுடன் இதுபற்றிக் கலந்து பேசி, இதை நன்மை பயக்கும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. மாற்றுப்பாலினத்தார், திருநங்கைகள் ஆகியோருக்காக, தமிழக அரசு வாரியம் ஒன்று அமைத்துள்ளது. இதனால் உடனடியாகப் பெரிய நன்மை விளையவில்லை என்றாலும், ஒரு நல்ல துவக்கம் ஏற்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் இந்த மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதைப்போன்று இந்தியா முழுவதுமே மற்ற மாநிலங்களிலும், கொண்டு வர வேண்டும் என்று ராகுலிடம் கூறப்பட்டது. மாற்றுப் பாலினத்தாரின் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும். இளம்வயதுடைய மாற்றுப் பாலினத்தாரின் முன்னேற்றத்திலும், உரிமைகளிலும், ராகுல் அதிக  ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாற்றுப்பாலினப் பிரதிநிதி கேட்டுக்கொண்டபோது, அதை ஏற்றுக்கொண்டார் ராகுல்.இந்தியா முழுவதும் விளைநிலங்கள், வேகமாக வீட்டுமனைகளாவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 20 ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால், விளைநிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கும் வகையில்  சட்டம் இயற்றி, அவற்றைச் சீரழியாமல் பாதுகாப்பது மிக அவசர அவசியம். இல்லையென்றால், மாவோயிஸ்டுகள் போன்ற ஆயுதப்  போராளிகள் இந்தியா முழுவதும் பரவி விடுவார்கள் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.விடுதலைப்புலிகளுக்காக நான் பரிந்து பேசவில்லை என்றாலும், இலங்கையில் போர்  உச்சகட்டத்தை நெருங்கிவிட்டிருந்த நிலையில், இந்திய அரசு, அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று ஒரு பெண்மணி மிக அழுத்தமாகக் கூறினார்.ஆனால், தானும், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அரசும் போரின் போது இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்களைப் பலமுறை கண்டனம் தெரிவித்துப் பேசியிருக்கிறோம். போருக்குப் பின்னர், தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கும், வீடுகள், ரயில்பாதைகள்  போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தாராளமாக நிதிஉதவி செய்துள்ளது என்றும் ராகுல்காந்தி கூறினார்.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்  விதமாக, பலர் தங்கள் கருத்துகளை சரமாரியாகப் பதிவு செய்தனர். இலங்கையில் நடந்தவற்றை மனித உரிமை மீறல்கள் என்று கருதுவது சிறிதும் நியாயமற்ற கூற்று. அங்கு நடந்து முடிந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. அதற்கான பல ஆதாரங்கள் வெளி வந்துள்ளன என்று ஒருவர் குரலெழுப்பினார். குழுமியிருந்தவர்களின் உண்மையான உணர்வுகள் அழுத்தம் திருத்தமாகவே அவருக்குப் புரியவைக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக உறுதியளித்துச் சென்றார் ராகுல். அவரது எளிமையான மனம் திறந்த நடவடிக்கைகளை உண்மையான ஒன்று என்று ஒரு சாராரும், நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வளவுதான் என்று மற்றொரு சாராரும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.மக்கள் பிரச்னைகளைப் பேசப் போகிறார்கள்  என்று எண்ணியிருந்த நிலையில், திருட்டு விசிடி தொந்தரவாலும், காப்பிரைட் தொடர்பான பிரச்னையாலும், திரைப்படத் தொழிலுக்கு முழுக்குப் போடவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறித் தங்கள் கல்லாப்பெட்டிப் பிரச்னைக்கு மனுப்போடத் தொடங்கினர் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். மனு அளித்தால், உரிய அமைச்சரிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று சமாதானம் கூறிய ராகுலிடம், மேலும் மேலும் திரைப்படத் துறையினர் அழுத்தம் கொடுத்ததால், சரி, தில்லியில் வந்து சந்தியுங்கள் என்று கூறினார் ராகுல்.இப்படியாக, விவாதத்துக்கான நேரம் ஒரு மணிநேரமாகக் குறைந்ததாலும், திரைப்படத்துறையினரின் குறுக்கீடுகளாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பெரும்பாலான அறிவுஜீவிகள்  ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. மாலை நேரம் வீட்டுக்கு வந்து, தொலைக்காட்சியைப் பார்க்க நகர்ந்தபோது, அண்மைச் செய்தி ஒன்று மீண்டும் மீண்டும் வந்து போனது.கோலிவுட்டுடன்  ராகுல் காந்தி  சந்திப்பு. திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி. அதுவரை, தலைக்குப் பின்னால் இருந்ததுபோலத் தோன்றிய ஒளிவட்டம், திடீரென்று மறையத் தொடங்கியது. அதோடு, ஜன்னலுக்கு வெளியே மக்கள் முகம் அலைமோதும் பொதுவெளியில் இருளும் வேகமாகக்  கவ்வத் தொடங்கியது.