தமிழக அரசின் "ஜிம் க்ரோ' சட்டங்கள்
அ. நாராயணன்
Published : 20 Sep 2010
பத்தொன்பதாம் நூற்றாண்டு - அமெரிக்காவில், கருப்பர்களை அடிமைகளாக நடத்துவது நிறுத்தப்பட்ட பின்பும், தீண்டாமைக் கொடுமை மட்டும் தொடர்ந்தது. கருப்பு நீக்ரோக்கள் வெள்ளையர்களுக்கு சமம், ஆனால் தனித்தனியே என்ற "ஜிம் க்ரோ' சட்டங்கள் 1876 முதல் 1965 வரை, கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் அமலில் இருந்தன. தீண்டாமை இருந்த அமெரிக்காவில் "ஜிம் க்ரோ' சட்டங்களின் படி, கருப்பர்கள் வசிக்க தனி காலனிகள், தனி விடுதிகள், தனி பொதுக் கழிப்பிடங்கள், தனி பள்ளிகள், தனி வணிக வளாகங்கள், தனி கல்லூரிகள் என்று எல்லாமே தனித்தனி தான். ÷வெள்ளை, கருப்பு இரண்டு இனமும் சரி சமம் என்று சொல்லப்பட்டாலும், கருப்பர்களுக்கான எல்லா அமைப்புகளும் வசதிக்குறைவாக, நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கும். இதே போன்றதொரு நிறவெறிக் கொடுமை, காந்தி நெல்சன் மண்டேலா, 1994-ல் ஜனாதிபதியாகும் வரை தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்தது. ÷உலகெங்கும் தீண்டாமைக் கொடுமைகள் மங்கிவரும் நிலையிலும், மக்களாட்சி அமையப் பெற்று 63 ஆண்டுகளும், அரசியலமைப்புச் சட்டம் அமையப்பெற்று 60 ஆண்டுகளும் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் சாதியின் பெயரால், தீண்டாமை மங்காமல் சுடர்விட்டு எரிவதை என்னவென்று சொல்வது? இன்றும் ஒவ்வொரு கிராமங்களுக்கு வெளியிலும் சேரிகள். அந்தச் சேரி மக்கள் பயன்பாட்டுக்காக தனி சுடுகாடு. திடீர்திடீரென்று முளைக்கும் தீண்டாமைச் சுவர்கள். ÷இந்நிலையில், தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக என்று தொடங்கப்பட்டு, அரசின் ஆளுமையில் இருக்கும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளும், விடுதிகளும், தலித் குழந்தைகளின், இளைஞர்களின் முன்னேற்றத்துக்குப் படிக்கற்களாக இருப்பதற்கு பதில் மிகப்பெரிய தடைக்கற்களாக நடைமுறையில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆக, கல்வியில் முன்னேற்றம் அடைந்து, சமூகப் பொருளாதார விடுதலை கிடைப்பதற்குப் பதில், இந்தத் தலித்துகளுக்காக தனியாக உள்ள கல்வி நிறுவனங்கள் இக்காலகட்டத்திலும் தரமற்ற முறையில் தொடர்வது என்பது, அரசுகளே நடைமுறைப்படுத்தும் எழுதப்படாத "ஜிம் க்ரோ' சட்டங்கள் என்று கூறுவதுதானே சரியாக இருக்கும். ÷கிராமங்களில் உள்ள தீண்டாமையையும், வாழ்வாதார இழப்பையும் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்துக்கு வந்து, பொது சமுதாய நீரோட்டத்துடன் கலந்து வாழ்ந்து முன்னேறத் துடிக்கும் தலித்துகளுக்கு இப்பொழுது, அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் பேரவலமாக அமைந்து விட்டது. ÷நகர்ப்புறச் சேரிகளில் உள்ளவர்களுள் 92 சதவீதத்துக்கும் அதிகமானோர் தலித்துகள் என்பதை குடிசை மாற்று வாரியம் எடுத்த கணக்கெடுப்பே உறுதி செய்கிறது. இதில் கணிசமான குடும்பங்கள், ஓரிரு தலைமுறைகளுக்கும் மேலாக, சென்னையில் வசித்து வருபவர்கள். ÷கிராமங்களில் வேறூன்றியுள்ள சாதிப்பிளவு போதாதென்று, நகர்ப்புற விளிம்பு மக்களை, பொருளாதார அடிப்படையில் அரசுகளும், பெரிய நிறுவனங்களும் கூட்டுச்சதி செய்து பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, ஒரு நவீன தீண்டாமையை ஆழமாக ஊன்ற முனைப்புடன் செயல்படுவதை என்னவென்று புரிந்து கொள்வது.÷ ÷தில்லியில் உள்ள வளரும் சமுதாயங்கள் பற்றிய ஆராய்ச்சி மையத்தின் சமூக அறிவியலாளர் அஷிஷ் நந்தி சமீபத்தில் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இன்றைய, சேரிகள் இல்லா இந்திய நகரங்களை உருவாக்கும் திட்டம் என்பது வெறுமனே சேரிகளை பொதுக்கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கும் திட்டம் தான். இது ஒன்றும் புதிய திட்டமல்ல, அன்றைக்கு சஞ்சய் காந்தி தில்லியில் முயற்சி செய்தார், பின்னர் ஜக்மோகன் முயற்சி செய்தார், அவர்களைக் குறைகூற முடியாத வகையில் இன்றைக்கு எல்லா அரசுகளும் கடைபிடிக்கின்றனர் என்கிறார் அவர். ÷சேரிகளை, கண்களுக்குத் தெரியாமல் செய்வதற்கான உந்துதல், மனசாட்சி இல்லாதவர்களிடமும், பெரும் செல்வாக்குப் பெற்றவர்களிடமும், முட்டாள்தனமானவர்களிடமும் மட்டும் இல்லை; யோசிக்கத் தெரியாத ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது என்கிறார் அஷிஷ் நந்தி. ÷சேரி மக்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பணிகளை மட்டும் உறிஞ்சிக் கொண்டு, அவர்களைத் தங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்யும் இக்குணம், இப்பொழுது ஒரு நோயாக - ஒரு பெரும் கொள்ளை நோயாக உருவெடுத்து வருகிறது என்று வருத்தத்துடன் அக் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் அவர். ÷தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளும், திட்டங்களும், நகர்ப்புற ஏழை மக்களிடம் வெளிக்காட்டும் கரிசனமும் சிறுவர்கதைகளில் வரும் குள்ளநரிகளின் தந்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. ÷சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளில் மறுகுடியமர்வு என்ற பெயரில் நடக்கும் மானுட அவலத்தைப் பற்றி ஏற்கெனவே "தினமணி' கட்டுரை மூலம் பதிவு செய்தாகி விட்டது. இப்பொழுது, செம்மஞ்சேரியைத் தாண்டி, தமிழக அரசு கட்ட முற்பட்டு வரும் பெரும்பாக்கம் மெகா மறுகுடியமர்வுத் திட்டம், எதிர்காலத்தில் அங்கு அனுப்பப்பட்டு, நிச்சயமாக வாழ்க்கை சூன்யமாகி விடக்கூடிய குழந்தைகளையும், பெண்களையும் நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது. ÷சில நாள்களுக்கு முன், சென்னையின் சேரிப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குடும்பங்களுக்கு, குடிசை அகற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன் செய்த அறிவுரையையும், அந்த அறிவுரைக்குள் நயவஞ்சகமாகப் பொதிந்திருக்கும் நவீன தீண்டாமையையும், சிந்திக்கும் திறனுடன் மனசாட்சியும் கொண்டவர்களால் சிறிதும் ஜீரணிக்க முடியாது. ÷பெரும்பாக்கத்தில் மட்டும் 23,320 குடியிருப்புகளைக் கட்டி, கிட்டத்தட்ட ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைவாசிகளை சென்னையிலிருந்து காலி செய்யவைத்து, அவர்கள் எல்லோரையும் வெறும் 125 ஏக்கர் பரப்பளவுக்குள் ஒரு முகாம் ஏற்படுத்தி முடக்கிவிட முன்வந்துள்ளது தமிழக அரசு. சென்னையைச் சுற்றி பெரிய நிறுவனங்கள் ஏக்கர் ஒன்றுக்குப் பல கோடிகள் கொடுக்கத் தயாராக உள்ள நிலையில், 23,320 ஏழைக் குடும்பங்களுக்கு 125 ஏக்கர் என்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பது அரசின் நினைப்பு. ÷இந்த பிரம்மாண்டமான குடியிருப்புக்குள், நவீன வணிக வளாகங்கள், ஏழு அடுக்கு குடியிருப்புகள், குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் லிஃப்ட் வசதி, பள்ளிகள், ஏன் ஒரு கல்லூரி கூடத் திறக்கப்படும் என்றும் குடிசை அகற்று வாரிய அமைச்சர் தூண்டில் போடுகிறார். ÷ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள மற்ற வளாகங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் அவலட்சணம். இன்று வரை அவற்றைச் சீர் செய்ய முடியவில்லை; முடியவும் முடியாது. இப்பொழுது பெரும்பாக்கத்தில் கட்டப்படும் ஏழு மாடி குடியிருப்புகள் எப்படி இருக்கும், அங்கு அரசு நிறுவும் லிஃப்ட் வசதி எப்படி இருக்கும் என்பதை எளிமையாக யூகிக்க முடியும். மக்களின் பங்களிப்பு, கலந்தாலோசனை இல்லாமல் கட்டப்படும் வளாகங்களில், குடிசை மாற்று வாரியத்தால் மட்டும் லிஃப்டுகளையும் மற்ற வசதிகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? ÷பொருத்தப்பட்ட சில நாள்களுக்குள்ளோ, வாரங்களுக்குள்ளோ இந்த லிஃப்டுகள் பழுதடைவதோடு, அதன் உதிரி பாகங்களும் சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு விடும். அது போன்றே, இவ்வளாகங்களில் மின்தடையே வராது என்றும், தரமான ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு வேலை செய்யும் என்றும் அரசு உத்தரவாதம் தந்தால், வடிகட்டிய ஏமாளிகள் மட்டுமே நம்பமுடியும். ÷விளிம்பு நிலை மக்களுக்கான வளாகங்களில் குடிநீரும், தரமான கழிப்பிடச்சேவையும் ஏழு மாடிகள் வரை ஏறி வராது என்பது திண்ணம். நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்குமாடிகளிலேயே மின்சாரம் தடைப்பட்டாலோ, லிஃப்டுகள் பழுதடைந்தாலோ, அந்த மக்கள் திணறிப்போய் விடுவார்கள். ÷பொதுக்கழிப்பிடத்துக்குச் செல்வது, பிளாஸ்டிக் குடங்களில் குடிநீர் பிடிப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, வேலைக்குச் சென்று வருவது என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏழு மாடி ஏறி இறங்க இப் பெண்களால் முடியுமா? கருவுற்ற பெண்கள் 7 மாடிகள் ஏறி இறங்கி, படிகளிலேயே குழந்தை பிறப்போ, கருச்சிதைவோ ஏற்பட்டால்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்படி, தண்ணீருக்கும், ஒவ்வொரு அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஏறி இறங்கி, ரத்த சோகை கொண்ட விளிம்புநிலைப் பெண்களின் மூட்டுகள் தேய்ந்து, நரம்புகள் புடைத்துப் போய்விடும். முழு மூட்டு மாற்றுச்சிகிச்சை போன்ற அதிக செலவாகும் நவீன அறுவைச் சிகிச்சைகளுக்கு, கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இடமில்லையே. ÷இந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் மக்களில் எத்தனை பேர் முதியவர்களாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் இருக்கப் போகிறார்களோ? அவர்கள் ஆறேழு மாடி ஏறி இறங்க முடியாமல், அரசு ஒதுக்கும் சிறு கான்கிரீட் அறைகளுக்குள்ளேயே வாழ்க்கையை முடக்கிக்கொள்ள வேண்டியது தான். ஆக, விளிம்பு நிலை மக்களுக்கு ஏழுமாடிக் குடியிருப்புகள் என்று யோசித்துள்ள அரசுத் துறைகளில் உள்ளவர்கள் இதயம் இல்லாதவர்கள் என்பது மட்டுமல்லாது, சிந்திக்கவும் மறுக்கும் அபூர்வப்பிறவிகளாகவே இருக்க முடியும். ÷பெரும்பாக்கம் வளாகத்தில் கொண்டு விடப்படும் ஏழை மக்களுக்காக அங்கு கல்லூரியும் அமைக்கப்படும் எனும் அமைச்சரின் அறிவிப்பின் மூலம், மறைமுகமாக ஒரு செய்தி வெளிப்படுகிறது. பெரும்பாக்கம் முகாம்களுக்கு செல்லவிருக்கும் நாற்பதாயிரம் விளிம்புநிலை குழந்தைகளே, நீங்கள் முகாமுக்குள்ளேயே உள்ள பால்வாடிகளில் உருண்டு புரண்டு, முகாமுக்குள்ளேயே உள்ள பள்ளிகளில் முடிந்தால் படித்து, முகாமுக்குள்ளேயே அமைய இருக்கும் கல்லூரியில் நுழைந்து கொள்ளுங்கள், கல்விக்காகக்கூட பொதுவெளிக்கு நீங்கள் வரத்தேவையில்லை என்பதாகும் இச்செய்தி. ÷பெரும்பாக்கம் மறுகுடியமர்வுத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய நவீன வளாகம்தான் கட்டித் தருகிறோம் என்று அரசுத் தரப்பில் வாதம் வைக்கப்படும். அந்த வாதத்தை ஏற்று, அரசு கூறுவது சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவும் வாய்ப்பு அதிகம். அது, தீண்டாமை இருந்த அமெரிக்காவின் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த "ஜிம் க்ரோ' சட்டத்தை நினைவுபடுத்தும். ஆனால், நீதியைத்தாண்டி, நியாயம் என்று ஒன்று உண்டு என்பார் அரசியல் பொருளாதார மேதை அமர்த்தியா சென். அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது - விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத் துரோகம். இந்த துரோகத்தை முறியடிப்பதுடன், நிலையான மற்றும் நியாயமான மாற்றுத்திட்டங்களைப் பற்றி அரசை யோசிக்க வைப்பது, கட்சிகளின், மக்கள் இயக்கங்களின், மனசாட்சி உள்ளவர்களின் உடனடிக் கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
No comments:
Post a Comment