Tuesday, December 28, 2010

Dinamani (02-07-2010): கட்டுரைகள் - மீண்டும் லாட்டரி ஓநாய்களா? - அ.நாராயணன்

மீண்டும் லாட்டரி ஓநாய்களா? 
அ. நாராயணன்
Published : 02 Jul 2010 
 
 


 



மகனின் தீவிரக் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, குடும்பத்தோடு 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை என கடந்த மாதம் தினசரிகளில் வெளிவந்தது ஒரு நிகழ்வு. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இன்று மிகச் சாதாரணமாகி விட்டன. தமிழகக் குடும்பங்கள் டாஸ்மாக் மது அரக்கனிடம் சிக்கிச் சீரழிந்து வரும் இன்றைய நிலையில், தமிழக அரசு லாட்டரி வர்த்தகத்துக்கு மீண்டும் பச்சைக்கொடி காட்ட இருக்கிறது என்று ஊகங்களின் அடிப்படையில் செய்தி வருகிறது. இச்செய்தி சமுதாயப் பற்றுள்ளோரின் வயிற்றில் புளியை அல்ல, திராவகத்தையே கரைப்பதாக உள்ளது. மக்கள் இரண்டாவது முறை ஆட்சிக்கு வாய்ப்புக் கொடுத்தபோதும், ஜனநாயக நெறிமுறைகளைத் துச்சமெனப் பறக்கவிட்டு, தடாலடி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவர் 2004-ம் ஆண்டு, சாராய சில்லறை விற்பனையைத் தனியாரிடமிருந்து பிடுங்கி, அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் துவக்கினார். இதில் தவறுகாண முடியாது எனினும், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி, கிட்டத்தட்ட 8,000 கடைகளை விரிவுபடுத்திய மோசமான செயல்பாடு தான், இன்றைய ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் ஒரு பெரிய ஆக்டோபஸôக விஸ்வரூபம் எடுத்தமைக்கு வித்திட்டது எனலாம். ஆனால், இதே ஜெயலலிதாதான் 2003-ம் ஆண்டு ஜனவரியில் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் தமிழகத்தில் லாட்டரி வணிகத்தை ஒழித்துக்கட்டினார். அதன் விளைவாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்மூலம் ஆகிவிடாமல் பிழைப்பதற்கான அரிய வாய்ப்புக் கிட்டியது. அன்றைக்கு ஜெயலலிதா லாட்டரி வணிகத்தை ஒழித்ததற்கான உண்மைக் காரணங்கள் வேறு ஏதேனும் இருக்கலாம். ஆனாலும், எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் மற்றும்  குதிரைப் பந்தயம் ஒழிப்பு போன்றே, தமிழகத்தில் லாட்டரி ஒழிக்கப்பட்டதும்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. 2003-ம் ஆண்டு லாட்டரி ஒழிக்கப்படுவதற்கு முன்பு, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.53 கோடி தான் அரசின் வருமானமாக வந்தது. ஆனால், லாட்டரி முதலாளிகளுக்கோ நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் தங்கச் சுரங்கமாக இருந்தது என்றால் மிகையில்லை. போலி லாட்டரிகள் தான் சந்தையில் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டதாகப் பேசப்பட்டது. லாட்டரி ஒழிக்கப்பட்டபோது, அதை நம்பி சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர், அதிலும் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் பார்வையற்றோர் தங்கள் வேலையை இழந்தனர். அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறுவதற்கு முன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருக்கக் கூடும் என்பதையும் வேலையிழப்பின் பாதிப்பிலிருந்து பலர் இன்னும் மீண்டிருக்க மாட்டார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், லாட்டரியால் ஏற்படும் சிறு சிறு நன்மைகளை விட, மிகப் பெரும் தீமைகள் தான் அதிகம். லாட்டரி விற்பனைக்காகவே கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன. காலை ஆறேழு மணிக்கே ஏழை எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகள் முன் திரண்டனர். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், லாட்டரிச் சீட்டுகளைக் கத்தைகத்தையாக வாங்குவதும், இடைவிடாமல் சுரண்டிப்பார்த்து ஏமாறுவதுமாக, நாள்களைக் கழித்தனர். லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டிச்சுரண்டியே, தமிழர்களின் நகங்களும், தமிழச்சிகளின் வாழ்வும் தேய்ந்தன. பகலில், அதிர்ஷ்ட லட்சுமிகளாக உருவகப்படுத்தப்பட்டன லாட்டரி டிக்கெட்டுகள். அவையே இரவானால், துரதிருஷ்ட தேவதைகளாக கடைகளுக்கு முன் குப்பைகள் வடிவில், குவியல் குவியலாகச் சிதறிக்கிடப்பது வாடிக்கையான நிகழ்வானது. பேப்பர் லாட்டரிகள் போதாதென்று, ஆன்லைன் லாட்டரிகளும் பேய்களாக, பிசாசுகளாக மக்களை ஆட்டிப்படைத்தன. சோம்பேறிகளாக முடக்கிப்போட்டன. ஆன்லைன் லாட்டரிக்கடைகள் பார்த்தீனியச் செடிகள் போன்று தமிழகமெங்கும் பரவத்தொடங்கின. குடி மட்டுமல்லாது லாட்டரிகளுக்காகவும், குடும்பச் சொத்துகள் அழிக்கப்பட்டன. ஆனால், ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்நிகழ்வுகள் மக்களால் கொடுங்கனவுகளாக மறக்கப்பட்டு விட்டன. 1997-98-ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்த போது ஒற்றை எண் லாட்டரியை ஓர்  அவசரச்சட்டம் மூலம் தடை செய்தார். பின்னர் 1999-ம் ஆண்டு, தேசிய அளவில் எல்லா லாட்டரிகளையும் ஒழிக்கும் லாட்டரி (ஒழிப்பு) மசோதா ஒன்று, மாநிலங்களவையில் அன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், முற்போக்கான இந்த லாட்டரி தடை மசோதா, கடந்த 10 ஆண்டுகளாக சட்டமாக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த மசோதாவை மத்திய அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் வாபஸ் வாங்க முனைந்தார். ஆனால், மிகப் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பால், அவரால் அதை அப்போது செய்ய முடியவில்லை. சில மாநில அரசுகளிடம் ஒத்தகருத்தை உருவாக்க முடியவில்லை என்று சாக்குப்போக்கு காட்டி, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் இருந்து வெற்றிகரமாக அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. லாட்டரி (ஒழிப்பு) மசோதா விரிவான விவாதத்துக்கு உள்படுத்தப்படாமல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் தருவாயில், அதிக சத்தமில்லாமல் வாபஸ் பெறப்பட்டதில், என்ன விதமான சிதம்பர ரகசியம் அடங்கியுள்ளது எனும் சந்தேகம் வலுக்கிறது. தமிழகத்தில் லாட்டரி தடையை எதிர்த்து, லாட்டரி முதலாளிகள், 2003}ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடியது இன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. லாட்டரி ஒழிப்பு மசோதாவுக்குப் பதிலாக, லாட்டரி ஒழுங்கு விதி 2010 எனும் புதிய மசோதாவைக் கொண்டு வந்து, லாட்டரி முதலாளிகளுக்குப் புழக்கடைக்கதவைத் திறந்துவிடும் கேவலமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. லாட்டரிச் சந்தையை ஒழுங்குபடுத்தி, அரசுகளுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் பாதுகாப்போம் எனும் ரீதியில் பேசுகிறார் சிதம்பரம். கேரள மாநில அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, ஆன்லைன் லாட்டரியை அங்கீகரிப்பதன் மூலம், உள்நாட்டு ஆன்லைன் லாட்டரி கும்பல்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட மாஃபியாக்களுக்கும், மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரிக்க இருக்கிறதோ என்றும் சந்தேகப்பட வேண்டியுள்ளது.ஆனால், லாட்டரி விற்பனை என்பதே கோடிக்கணக்கான குடும்பங்களை அழித்தொழிக்கும் ஒரு சாபக்கேடு என்று பல ஆண்டுகளாக லாட்டரி ஒழிப்பில் ஆர்வம் காட்டி வரும் பா.ஜ.க.வின் தேசியச் செயலர் விஜய் கோயல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த உண்மையை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது இன்றைய மத்திய அரசு. ஹவாலா மூலம் லாட்டரித் தொழிலை இந்தியா முழுவதும் செய்து வருபவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோடு வெளிப்படையாக உறவு கொண்டாடி வருவதாக சமீபத்தில் வரும் செய்திகள் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. "விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற நேர்மையான கோஷத்துடன், தமிழகத்தில் லாட்டரி விற்பனையை 1968-ல் துவக்கியது தி.மு.க.வின் நிறுவனர் அன்றைய முதல்வர் அண்ணாதான். பேரறிஞராய் இருந்தாலும், பிற்காலத்தில் நேர்மையற்ற ஆட்சியாளர்களால் இந்த லாட்டரித் தொழில் ஒரு மாஃபியாவாக உருவெடுக்கும் என்றும், லட்சக்கணக்கான ஏழை மக்கள், இந்த சூதாட்ட வலையில் சிக்கி சித்தப் பிரமை பிடித்து அழிந்தொழிவார்கள் என்றும் முன்கூட்டியே கணிக்கத்தவறி விட்டார். அந்த மனிதநேயர் உயிருடன் இருந்திருந்தால், பிற்காலத்தில்  லாட்டரியால் மக்கள் சீரழிவதை ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார் என்பதை மட்டும் உறுதிபடக் கூற முடியும். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குள்ள தடை என்றென்றும் நீடிக்கும் என்றும் போலி லாட்டரிகளை ஒழிக்க தீவிர சட்ட நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரங்களும் செய்யப்படும் என்றும் உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், வருமான நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியுள்ளது எனும் சாக்கில், மீண்டும் லாட்டரிச் சீட்டுகளை தமிழகக் கடைவீதிகளில் உலவ விட்டால், அதைவிட மிகக் கேவலமான, பிற்போக்குத்தனமான, சமூக விரோதமான நடவடிக்கை வேறேதும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தை எதிர்த்தும், மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் புழக்கடைக்கதவு மசோதாவை எதிர்த்தும் சமூகத்தில் அக்கறை கொண்டுள்ள சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் கூட்டாகக் குரல் எழுப்ப வேண்டும். லாட்டரிச் சந்தையை எதிர்த்து ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுக்கவும், மக்களைத்திரட்டவும், பொதுக்கருத்தை உருவாக்கவும் தயங்கக்கூடாது. கடந்த மாதம் மத்திய அரசு லாட்டரி தடைச்சட்ட மசோதாவை திரும்பப் பெற்றதற்கு, அமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி கூறியுள்ளனர் தமிழக லாட்டரி முதலாளிகள். அதோடு, தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும்  கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில்  நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.செம்மொழித் தமிழச்சிகளே... ஓநாய் ஊளையிடும் குரல் மிக அருகில் கேட்கிறது. உங்கள் வீட்டு ஆடுகளைப் பாதுகாக்கத் தயாராகுங்கள். உஷார்!

No comments:

Post a Comment